கள்ளக்குறிச்சியில் பள்ளி வாகனம் எரிப்பு எதிரொலி தனியார் பள்ளிகள் இன்று இயங்காது: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை: பள்ளி மாணவி இறந்த சம்பவத்தால் வெடித்த போராட்டத்தில் நேற்று நடந்த வன்முறையை அடுத்து தனியார் பள்ளிகள் கண்டனம் தெரிவித்து பள்ளிகள் இன்று இயங்காது எ்ன்று அறிவித்துள்ளனர். பள்ளிகளை மூடினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் எச்சரித்துள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்த மாணவி இறந்த சம்பவத்தை அடுத்து, நீதி கேட்டு போராட்டம் நடத்திய நபர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து வாகனங்களை அடித்து நொறுக்கினர். தீ வைத்து எரித்தனர். பள்ளி வளாகத்திலும் சேதங்களை ஏற்படுத்தினர். தடுத்த போலீசார் மீதும்  தாக்குதல்  நடத்தினர். இந்நிலையில், தனியார் பள்ளிகளின் சங்கத்தினர், 18ம் தேதி பள்ளிகளை நடத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு அனைத்து தனியார் பள்ளிகளின் சங்கங்கள் இணைந்து அறிவித்துள்ளன.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து வநத் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி, பள்ளி வளாகத்தின் விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து  தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர், பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் 3 நாட்கள் நீடித்து வந்தது.

நான்காவது நாளான நேற்று, பெற்றோர், உறவினர் என்ற போர்வையில் பள்ளி வளாகத்துக்குள் சில சமூக விரோத கும்பல் அத்துமீறி நுழைந்து பள்ளியின் மீது ஏற்கெனவே இருந்த காழ்ப்புணர்ச்சியால் பள்ளியின் பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினர் மீது கல்வீசித் தாக்கியும், காவல்துறை வாகனங்கள் மீது தீ வைத்து கொளுத்தியும், பள்ளியின் உடைமை கட்டிடம் த விர மற்ற அனைத்து உடமைகளையும்  மாணவர்களின் சான்றுகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளுக்கு சேதம் விளைவித்தும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பள்ளியில் படித்து வரும் 5 ஆயிரம் மாணவ மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், பள்ளியின் உடமைகளுக்கும் அதில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் இது போல சம்பவங்கள் நிகழாமல் தமிழ்நாட்டில் உள்ள  தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதால் தமிழகம் முழுவதும் 18ம் தேதி சுமார் 12 ஆயிரம் தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என்று  தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கிறோம். இவ்வாறு கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கும், பள்ளியின் உடமைகளுக்கும் அதில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

* பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை

தனியார் பள்ளிகளில் இந்த அறிவிப்பை அடுத்து, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் கருப்பசாமி நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே உரிய அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் பள்ளிகளை மூடினால், விடுமுறை அறிவித்தால் அந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: