திரவுபதி முர்மு-யஷ்வந்த் சின்ஹா இடையே போட்டி; ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்கிறது.! 4,800 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர்

புதுடெல்லி: நாளை நாட்டின் 15வது ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால், 4,800 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் திரவுபதி முர்மு - யஷ்வந்த் சின்ஹா இடையே போட்டி நிலவுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியும், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியும் முடிவடைகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் நாளையும் (ஜூலை 18), துணை குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதியும் நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

துணை குடியரசு தலைவர் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் போட்டியிடுகிறார். எதிர்கட்சிகளின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து முடிவு எடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (ஜூலை 19) நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாளை நாட்டின் 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், தேர்ந்தெடுக்கப்பட்ட 4,800 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் நாடாளுமன்றம் மற்றும் அந்தந்த மாநில சட்டமன்றத்தில் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சட்டப் பேரவை இல்லாததால், இந்த குடியரசுத்  தலைவர் தேர்தலில் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 708ல்  இருந்து 700 ஆகக் குறைந்துள்ளது. ஒவ்வொரு எம்எல்ஏவின் வாக்கு  மதிப்பும் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். உத்தரபிரதேசத்தில் ஒவ்வொரு  எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 208 ஆகவும், ஜார்கண்ட், தமிழ்நாட்டில் 176  ஆகவும் உள்ளது. மகாராஷ்டிராவில் 175 ஆகவும், குறைந்தபட்சமாக சிக்கிமில் ஒரு  எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு ஏழு என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி  தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது. தேர்தல்  ஆணையத்தின் உத்தரவுப்படி, எம்பிக்களுக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும்,  எம்எல்ஏக்களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும் வழங்கப்படும்.  வாக்களிப்பதின் ரகசியத்தை காக்க, வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சீட்டைக்  குறிக்கும் வகையில், வயலட் மையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பேனா  வழங்கப்படும்.

இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவுக்கு 61 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவரே அடுத்த குடியரசு தலைவராக இருப்பார் என்றும், வரும் 25ம் தேதி நாட்டின் புதிய குடியரசு தலைவராக பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திரவுபதி முர்முக்கு, ஆளும் பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவிர, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாதி, அஇஅதிமுக, தெலுங்கு தேசம், மதசார்பற்ற ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் ஆதரவு அளிப்பதால் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை திரவுபதி முர்மு பெறவாய்ப்புள்ளது. மொத்த வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் மொத்தமுள்ள 10,86,431 வாக்குகளில் 6.67 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் திரவுபதி முர்முவுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: