ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கு சிறப்பு வார்டு தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை விமான நிலையத்தில்  மேற்கொள்ளப்பட்டு வரும் குரங்கு அம்மை பாதிப்பு பரிசோதனை குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்பு அவர் அளித்த பேட்டி: ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 63 நாடுகளில் குரங்கு அம்மை தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரம் 10, 12 நாடுகளிலேயே இருந்தது. இந்தியாவில் முதல் தொற்று கடந்த 2ம் தேதி ஐக்கிய அரபு நாட்டிலிருந்து கேரளா மாநிலம், திருவனந்தபுரம் வந்த ஒரு குழந்தைக்கு உறுதியானது. தமிழக கேரள எல்லையில் 13 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து சென்னை வரும் உள்நாட்டு விமானங்களில் வருவோரும் கண்காணிக்கப்படுகின்றனர்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் 2 விழுக்காடு நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல், குரங்கம்மைக்கு சேர்த்து பரிசோதனை செய்யப்படுகின்றன. பதிப்பு அதிகம் கொண்ட குறிப்பிட்ட நாட்டில் இருந்து வருவோரில் முகம், கையில் கொப்பளம் இருக்கிறதா என ஆய்வு செய்யப்படுகிறது. இந்த மாதத்தில் சென்னைக்கு 531 விமானம் மூலம் 1 லட்சத்து 153 பயணியர் வருகையில் 1987 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர். 39 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. வீடுகளில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனா். குரங்கு அம்மை பரிசோதனைக்கு சென்னையில் ஒரு ஆய்வகம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். சென்னையில் குரங்கு அம்மைக்கு ஒரு சிறப்பு வார்டு 10 படுக்கையுடன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தயாராகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: