சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரிசார்ட்டில் அடிப்படை பணிகள் தீவிரம்: தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

சென்னை: சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி போர் பாயிண்ட்ஸ் - ஷெரட்டன் ரிசார்ட்டில் நடக்க உள்ளது. இதனை தலைமை செயலாளர் இறையன்பு  நேரில் வந்து ஆய்வு நடத்தினார். மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் - ஷெரட்டன் ரிசார்ட்டில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. இதில், 188 நாடுகளை சேர்ந்த 343 அணிகள், 2500க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.இந்நிலையில், போட்டி நடக்க உள்ள ரிசார்ட்டில் பழைய அரங்கம், செஸ் போர்டு டேபிள், வாகன நிறுத்துமிடம், 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய அரங்கம், சாலை அமைக்கும் பணி, மீடியாவுக்காக வாகனம் நிறுத்தம், பல்வேறு பணிகள், தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும், நடந்து வரும் பணிகளை அரசு மூலம் நியமிக்கப்பட்ட கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர், சிறப்பு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, அறிக்கையை தயார் செய்து  முதல்வருக்கு அளித்து வருகின்றனர். இந்நிலையில், போட்டி நடக்க உள்ள போர் பாயிண்ட்ஸ் - ஷெரட்டன் ரிசார்ட்டில் புதிய அரங்கம் அமைக்கும் பணி, வாகன நிறுத்தம், வீரர்கள் உணவு சாப்பிடும் கூடம், செஸ் போர்டு அமைக்கும் பணி ஆகியவற்றை தமிழக தலைமை செயலாளர்  இறையன்பு பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேற்று நேரில் வந்து ஆய்வு நடத்தினார். பின்னர், அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார். அப்போது, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: