தமிழக அரசின் சார்பில் சென்னையில் நாளை ‘தமிழ்நாடு நாள் விழா’: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

சென்னை: தமிழக அரசின் சார்பில் ‘தமிழ்நாடு நாள் விழா’ நாளை சென்னையில் நடக்கிறது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு நாள் விழா 18ம் தேதி (நாளை) காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேருரையாற்றுகிறார். இதில் கருத்தரங்கம், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக குறும்படம் திரையிடல் மற்றும் விழா சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. முன்னதாக, காலை 9 மணியளவில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. சமூக நீதி கண்காணிப்பு (ம) பாதுகாப்பு குழு தலைவர் சுப.வீரபாண்டியன் ‘தமிழ்நாடு உருவான வரலாறு’, ஆழி செந்தில்நாதன் ‘‘மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும்”, வாலாசா வல்லவன் ‘தமிழகத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள்’, ம.ராசேந்திரன் ‘தாய்நாட்டுக்கு பெயர் சூட்டிய தனயன்’ எம்எல்ஏ நா.எழிலன் ‘முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு’ ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றுகிறார்கள்.

விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடந்த பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் இலக்கிய மாமணி  விருது 2021,  தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது-2021, கபிலர் விருது-2021, உ.வே.சா விருது - 2021, அம்மா இலக்கிய விருது - 2021, காரைக்கால் அம்மையார் விருது - 2021 ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.  தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையுரையும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை உரையும் ஆற்றுகிறார்கள். மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் மற்றும் கலைவாணர் அரங்கில்  சிறப்பு கண்காட்சியும் நடக்கிறது. இதை பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்கள் பார்க்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: