ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி: நலமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், வேறு சில உடல்நலக்குறைவு உள்ளவர்களுக்கும் கொரோனா எளிதில் தாக்குகிறது. ஆகையால் மீண்டும் பாதிப்பு அதிகமாகி வருகிறது. பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடந்த சில நாட்களாக உடல் சோர்வாக காணப்பட்டது.  

இதையடுத்து, அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடல் சோர்வு, காய்ச்சல் காரணமாக அவர் சென்னையில் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா லேசான அறிகுறிகளுடன் கடந்த 15ம்தேதி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட  பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நிபுணர் குழுவின் கீழ்  கண்காணிப்பில் உள்ளார். அவர் நலமாக உள்ளார். மற்றும் மருத்துவ குழுவின்  ஆலோசனைபடி மருந்து உட்கொண்டு வருகிறார்’’ என கூறப்பட்டுள்ளது.

* நலம்பெற முதல்வர் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்.

Related Stories: