தண்டையார்பேட்டையில் ரூ.92 லட்சத்தில் ஜீவா பூங்கா சீரமைப்பு பணி: வடசென்னை எம்பி தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜீவா பெயரில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில், தண்டையார்பேட்டை இரட்டைக் குழி தெரு, அப்பாசாமி தெரு, சேணியம்மன் கோயில் தெரு, ரத்தின சபாபதி தெரு, கே.ஜி கார்டன் உள்ளிட்ட பகுதி மக்கள் நடைபயிற்சி செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

 

இந்த பூங்காவின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ளது. எனவே, இதை சீரமைக்க வேண்டும், நடைபாதையை புதுப்பிக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.92 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி விராசாமி தலைமை வகித்து, பணிகளை தொடங்கி வைத்தார். சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இளைய அருணா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர் லட்சுமணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், செயற்கை நீரூற்று, நடைபயிற்சி தளம், சுற்றுச்சுவர் பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: