திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா; கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சிறப்பு மருத்துவ குழுக்கள்: அமைச்சர் ஆவடி நாசர் பேட்டி

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்ற தமிழகம் மட்டுமின்றி பல்ேவற மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம்.

இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை 5 நாட்கள் ஆடி கிருத்திகை பெருவிழா நடைபெற உள்ளது. இதில் 21ம் தேதி அஸ்வினி விழா, 22ம் தேதி பரணி விழா, 23ம் ஆடி கிருத்திகை விழா மற்றும் முதல் தெப்பல் விழா, 24ம் தேதி இரண்டாம் தெப்பல் விழா, 25ம் தேதி மூன்றாவது தெப்பல் விழா ஆகியவை நடைபெறுகிறது.

இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானுக்கு மலர் காவடிகள் எடுத்தும், தலைமுடி காணிக்கை செலுத்தியும் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி கிருத்திகை விழாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாலோனசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். மாவட்ட போலீஸ் எஸ்பி பெகேர்லா செபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், திமுக மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, நகர் மன்ற துணை தலைவர் சாமிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் துணை ஆணையர் விஜயா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.கடந்த 2 ஆண்டுகளாக ஆடி கிருத்திகை விழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடைபெறுவதால் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிய வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், கழிவறை, தங்கும் வசதி ஆகியவை தங்கு தடையின்றி கிடைக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், `ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய உள்ளதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பக்தர்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை திருத்தணிக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதால் சுகாதார துறை சார்பில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்’ என தெரிவித்தார்.

Related Stories: