நீலகிரி மலை ரயிலுக்கு யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம் அந்தஸ்து கிடைத்த தினம் இன்று கொண்டாட்டம்

குன்னூர்: நீலகிரி மலை ரயிலுக்கு யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம் அந்தஸ்து கிடைத்த தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. மலை பிரதேசம் என்பதே இயற்கையின் அழகிற்கு  குறைவில்லாத இடம்தான். அதை மலைகளின் மடிப்புகளின் வழியே ரயில் மூலம் கண்டுகளிப்பது பேரானந்த அனுபவமாக இருக்கும். நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எல்லோரும் ஆசைப்படுவது மலை ரயிலில் சென்று பச்சைப்பசேல் அழகை சுற்றிபார்க்க வேண்டும் என்பதைத்தான். ஆசியாவில் தற்போதும் பல் சக்கரங்களில் இயங்கும் ஒரே மலை ரயில் நீலகிரி மலை ரயில் ஆகும். இந்த நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் துவங்கிய நீலகிரி வரை 208 வளைவுகளின் வழியாக வளைதும் நெளிந்தும் 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறி 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் பயணம் செய்கிறது.  மலை ரயிலின் வரலாறு:  1833ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல்  ஊட்டி வரை மாட்டு வண்டி சாலை அமைக்கப்பட்டது. பின்னர் 1872ம் ஆண்டில் குதிரை வண்டி மூலம் பயணித்தனர். இயற்கையின் அழகையும், குளிரான காலநிலை நிலையும்  அப்போதைய மதராஸ்பட்டினத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு மிகவும் பிடித்ததால் நீலகிரி மாவட்டத்தை கோடை கால தங்குமிடமாக மாற்றினர். பின்னர் அங்கு ரயில் சேவை துவங்க திட்டமிட்டனர். 1880ம் ஆண்டு   குன்னூர் ரயில்வே கம்பெனி துவங்கினர். ஆனால் போதிய நிதி கிடைக்காததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் 1890ம் ஆண்டில் நீலகிரி மலை ரயில் கம்பெனி பல்சக்கரங்களால் ஆன தண்டவாளம் அமைத்து  குன்னூர் வரை அமைக்கப்பட்டு நீராவி இன்ஜின் மூலம் 1899ம் ஆண்டு  முதல் இயக்கப்பட்டது. 1908ம் ஆண்டு முதல் குன்னூரில் இருந்து ஊட்டி வரை சாதாரணமாக தண்டவாளங்கள் அமைத்து மலை ரயில் சேவை இயக்கப்பட்டது. நூற்றாண்டைக் கடந்தும் மவுசு குறையாத மலை ரயில், போக்குவரத்து நடைமுறையில் புதிய முயற்சியை புகுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகை செம்மையாக வெளிப்படுத்தும் நீலகிரி மலை ரயில், மேட்டுப்பாளையம்  ஊட்டி வரை 46.61 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது.மேட்டுப்பாளையம்  குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால், தண்டவாளங்களுக்கிடையே பற்சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனை பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது. உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் இந்த மலை ரயில் கடந்த 2005ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் தனது  17ம் ஆண்டினை துவங்கியுள்ளது. பாரம்பரிய அந்தஸ்து கிடைத்த  தினமான இன்று குன்னூரில் ரயில் பயணிகள் இதை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே பர்னஸ் ஆயில் மூலம் நீராவி இன்ஜின் இயக்கப்பட்டு வருகிறது‌. அதே நேரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த 37384 என்ற எண் கொண்ட  நிலக்கரி நீராவி இன்ஜின் தற்போதும் இயங்கும் நிலையில் உள்ளது‌. இதனை சீரமைத்து மீண்டும் இயக்க வேண்டும் என்பது நீலகிரி மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: