பள்ளிகள், மருத்துவமனைகளை மேம்படுத்த சன் டிவி ரூ.5.26 கோடி நிதி: ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் பாடங்கள் எளிதாக புரிவதாக மாணவர்கள் பெருமிதம்

சென்னை: சன் டிவி மற்றும் சன் பவுண்டேஷன் மூலம் 5 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், அரசு மருத்துவமனைகளுக்கான நவீன உபகரணங்கள் ஆகியவற்றுக்காக சன் டிவி மற்றும் சன் பவுண்டேஷன் 5 கோடியே 26 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியது.  “சேவ் த சில்ரன்” தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, அந்த திட்டங்கள் பயனாளிகளின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

சன் டிவி அளித்த ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய் நிதியுதவி மூலம் 50 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் ஸ்மார்ட் வகுப்பறைகளை காவேரி கலாநிதி மாறன் திறந்து வைத்து, மாணவர்களுடன் உரையாடினார். பாடப் புத்தகங்களை பார்த்து மட்டுமே படித்துக்கொண்டிருந்தபோது எளிதில் புரியாத பாடங்கள்கூட, ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் எளிதாக புரிவதாக மாணவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

கொரோனா பொது முடக்கத்தினால் மாணவர்களுக்கும் கற்றலுக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளியை மீட்டெடுக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். அரசுப் பள்ளிகளில் சுத்தமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதாரமான சூழலை ஏற்படுத்துவதற்கான “வாஷ்” திட்டத்துக்காக சன் பவுண்டேஷன் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்தது. அதன் மூலம் 30 பள்ளிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன.  செல்லாத்தூர் நடுநிலைப் பள்ளியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பார்வையிட்ட காவேரி கலாநிதி மாறன், மாணவர்களுடன் கலந்துரையாடினார். ஆர்.கே.பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி மற்றும் ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு நவீன உபகரணங்கள் வாங்குவதற்கும், அந்த மருத்துவமனைகளில் செயல்படும் கோவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சை முறைகளை மேம்படுத்தவும் சன் டிவி 2 கோடியே 44 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தது. இந்த நிதியுதவியின் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களையும் காவேரி கலாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.

சன் டிவி நிதியுதவி மூலம் இந்த நான்கு அரசு மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட்டுள்ள நவீன உபகரணங்கள் மூலம், அங்குள்ள நோயாளிகள் உயர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை இனி ஏற்படாது என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்ஸன் தெரிவித்தார். நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. இணைந்து இதுவரை 160 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: