செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறவுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு.!

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறவுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் ஆய்வு செய்தார். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற      28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இந்த போட்டிக்கான தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் 28.07.2022 அன்று நடைபெறவுள்ளது. போட்டிக்கான தொடக்க விழா தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் இன்று 14.07.2022 ஆய்வு செய்தார்.

அப்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் மருத்துவர். கா.ப.கார்த்திகேயன்,இ.ஆ.ப.,மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். இந்த ஆய்வின் போது விழா மேடை அமைப்பு, பார்வையாளர்கள் அரங்கம், இருக்கை வசதி, விழா நேரலை செய்வதற்கான வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும்  நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த பின் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் சர்வதேச விளையாட்டு உலகமே வியக்கும் வகையில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 28.07.2022 அன்று மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தமிழ்நாடு அரசின் சார்பில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டில் இருந்து வரும் விளையாட்டு வீரர்கள், செய்தியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் விசா ஏற்பாடு பணிகள், வாகன வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாமல்லபுரம் மற்றும் சென்னையில் நட்சத்திர விடுதிகளில் 2000திற்கும் மேற்பட்ட அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பூஞ்சேரி பகுதியில் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் வருகிற 23.07.2022 ஆம் தேதிக்குள் முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இப்போட்டியினை உலக மக்கள் அனைவரும் நேரலையில் கண்டு களிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.  இது நம்ம சென்னை, நம்ம செஸ், நம்ம பெருமை என்ற வகையில் தமிழினத்தின் கலாச்சாரம், பண்பாடு மொழிப் பெருமையினை உலகிற்கு பறைசாற்றுகின்ற வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இப்போட்டியினை வெற்றிபெற செய்ய வேண்டும் என கூறினார்.

Related Stories: