வாக்குப்பெட்டிகள் சென்னை வந்துள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

சென்னை: தமிழகத்தில் சென்னை தலைமை செயலக வளாகத்தில் இருக்கும் குழு கூட்ட அரங்கில் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ள ஓட்டுப்பெட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பாதுகாப்புடன் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் இடத்துக்கு கொண்டு வரப்படும். இதுகுறித்து சட்டப்பேரவை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஜனாதிபதி தேர்தல் வருகிற 18ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குச்சீட்டில் ‘வைலட்’ கலர் பேனா மூலம் வாக்களிக்க வேண்டும். அதற்கான பேனா வாக்குப்பதிவு அலுவலகத்தில் தரப்படும். இரண்டு வேட்பாளர்களுக்கு அருகில் ஒரு கட்டம் இருக்கும்.

அதில், எம்எல்ஏக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அந்த கட்டத்தில் ‘ஒன்று’ என்று எழுத வேண்டும். இரண்டாவது வேட்பாளர்களுக்கு, வாக்களிக்க விரும்பினால் ‘இரண்டு’ என்று எழுத வேண்டும். 2 வேட்பாளர்களும் சமமான வாக்குகள் வாங்கியிருந்தால், இரண்டாவது வாக்கு எண்ணப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நாகப்பட்டினம் செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி ஆகிய 2 எம்பிக்கள் சென்னையில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்னையில் வாக்களிக்க அனுமதிக்கப்படும். ஆனாலும், இன்னும் அவர்கள் இறுதி முடிவை தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* தெளிவான முடிவுக்கு பிறகே நடவடிக்கை

ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட 3 அதிமுக எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்களாக இவர்கள் செயல்பட முடியாது என்று  கடிதம் கொடுக்கப்பட்டால், அதிமுக பொதுச்செயலாளர் சபாநாயகருக்கு கடிதம் கொடுக்க வேண்டும். அதேபோன்று, புதிய எதிர்க்கட்சி துணை தலைவர் நீக்கம் மற்றும் புதிய துணை தலைவராக யாரை நியமிக்க வேண்டும் என்பதற்கும் அதிமுக பொதுச்செயலாளர் என்பவர் சபாநாயகருக்கு கடிதம் கொடுக்க வேண்டும். ஆனால், 2 தரப்பிலும் நோட்டீஸ் அளித்து அவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்திய பிறகே சபாநாயகர்  இறுதி முடிவை அறிவிப்பார். அதேநேரம், பொதுச்செயலாளர் பதவி குறித்த பிரச்னை நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணைய விசாரணையில் உள்ளதால் அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஒரு தெளிவான முடிவு தெரிந்த பிறகே இறுதி முடிவு எடுக்க முடியும். அதுவரை எந்த கடிதம் கொடுத்தாலும், அது கிடப்பில்தான் வைக்கப்படும். அடுத்த சட்டமன்ற கூட்டம் நவம்பர் 10ம் தேதிக்குள் கூட்டவேண்டும். அதற்குள் இந்த பிரச்னை முடியுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக பேரவை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

Related Stories: