புது வண்ணாரப்பேட்டையில் ரூ.30 லட்சத்தில் பூங்கா சீரமைப்பு பணிக்கு பூமி பூஜை

தண்டையார்பேட்டை: வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பல்வேறு சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தொகுதி நிதியிலிருந்து பேருந்து நிழற்குடை, பூங்கா சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் உள்ள தந்தை பெரியார் பூங்காவை சீரமைப்பதற்கான பணிகள் தொடங்குவதற்கு விழா நடைபெற்றது.

வடசென்னை  நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்து பூங்கா சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைப்பது, பூங்காவில் பழுதடைந்துள்ள நடைபாதையை சீரமைப்பது, பூங்காவில் உள்ள பவுண்டேஷன் சரி செய்வது உள்ளிட்ட பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூஜைக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தலைமை வகித்தார். சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், சென்னை மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர் பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: