சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வரும் வரை மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை உயர்கல்வி நிறுவனங்கள் நீட்டிக்க வேண்டும்: யுஜிசி செயலாளர் ராஜ்னிஷ் ஜெயின் வலியுறுத்தல்

சென்னை: சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஏற்படுவதால், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் தங்கள் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்கலைக்கழக யுஜிசி செயலாளர் ராஜ்னிஷ் ஜெயின் வலியுறுத்தி உள்ளார். சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கொரோனாவை கருத்தில் கொண்டு 2 பருவங்களாக தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி, 2ம் பருவத் தேர்வு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15ம் தேதியுடன் நிறைவு பெற்றது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 24ம் தேதி வரையும் நடத்தி முடிக்கப்பட்டது. மற்ற வாரிய தேர்வு முடிவுகள் அனைத்தும் வெளியான நிலையில், சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மட்டும் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக யுஜிசி செயலாளர் ராஜ்னிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், உயர்கல்வி நிறுவன இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: சி.பி.எஸ்.இ. 2 பருவங்களில் தேர்வை நடத்தி முடித்துள்ளது. இதில் 2ம் பருவத் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அது நிறைவு பெற்றதும், 2 பருவங்களின் செயல்பாட்டின் அடிப்படையில் ‘வெயிட்டேஜ்’ இணைக்கப்பட்டு இறுதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதற்கான செயல்முறைகள் முடிவடைய ஒரு மாத காலம் ஆகும். இந்த நிலையில் சில பல்கலைக்கழகங்கள் 2022-23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பதிவை தொடங்கி இருப்பதாகவும், சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டால், சி.பி.எஸ்.இ மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற புகார் வந்திருக்கிறது. எனவே சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தால் 12ம் வகுப்பு தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான கடைசி தேதியில் போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்.

Related Stories: