தாம்பரம் புலிகொரடு பகுதியில் ரூ.5 கோடி அரசு நிலம் மீட்பு: வருவாய்துறை நடவடிக்கை

தாம்பரம்: மேற்கு தாம்பரம், புலிகொரடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வேண்டும், என பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்திடம் புகார் அளித்தனர். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி புலிகொரடு பகுதியில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 11 ஆயிரம் சதுர அடி கொண்ட அரசு புறம்போக்கு நிலம் 13 குடும்பங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. கடந்த மாதம் அதேபகுதியை ஒட்டியுள்ள ரூ.12.50 கோடி மதிப்பிலான 50 சென்ட் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றபட்ட நிலையில், மீதமிருந்த நிலங்களை மீட்கும் பணிகள் நடைபெற்றது.

எனவே, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து முறையாக நோட்டீஸ் வழங்கவில்லை எனக்கூறி ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதன்மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டதாக, வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* அதிகாரிகள் அலட்சியம்

புலிகொரடு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும்போது, அதனை ஒட்டி பட்டா நிலத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு அதிகாரிகள் எந்த ஒரு முன்னறிவிப்பும் கொடுக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் அலட்சியத்தால் ஆக்கிரமிப்பு கட்டிடத்தின் சுவர் அருகில் பட்டா நிலத்தில் உள்ள வீடுகளின் மேல் விழுந்துள்ளது. இதில், சில வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து, ஏசி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்துள்ளன. மதில்சுவர் விழும் சத்தத்தை கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் உயிர் தப்பினர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு முன்னெச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சேதமடைந்த பொருட்களுக்கு அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: