'ஆளுநர் எந்த ‘-ism’ பின்பற்றுவேராக இருந்தாலும் 'Humanism'என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும்' - அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பட்டமளிப்பு விழாவில் கல்வியாளர்களை சிறப்பு விருந்தினராக அழைப்பது தான் நடைமுறை. மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அரசை ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழாவுக்கான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உள் விவகாரங்களில் ஆளுநர் தலையிடுவது தவறானது. இணை வேந்தரான தன்னை கேட்காமலேயே பட்டமளிப்பு விழாவில் யாரை பேச அழைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினர் என யாரையும் அழைக்கும் வழக்கம் கிடையாது.

பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு வேந்தருக்கு முன் பேச வேண்டியது இணை வேந்தர்தான். பல்கலைக்கழகங்கள், மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துவதாக சந்தேகம் உள்ளது. பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனை கவுரவ விருந்தினராக அழைப்பதன் நோக்கம் என்ன? ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவதால் ஒன்றிய ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதே ஆளுநரின் கடமை. பாஜகவுக்கு பிரச்சாரம் செய்பவர் போல் ஆளுநர் இருக்கிறார். இந்திய நாட்டின் வரலாற்றை ஆளுநர் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். ஆளுநர் எந்த ‘-ism’ பின்பற்றுவேராக இருந்தாலும் Humanism என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும் இவ்வாறு கூறினார்.

Related Stories: