ஊத்துக்கோட்டை பஸ் பணிமனையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பஸ் பணிமனையில் இருந்து பள்ளி நேரத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலமான புத்தூர், திருப்பதி, காளஹஸ்தி, நகரி என 36 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த அரசு தனியார் கம்பெனி ஊழியர்கள் ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்து தாங்கள் பணிபுரியும் சென்னை கோயம்பேடு, செங்குன்றம், பாரிமுனை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பஸ் மூலம் வேலைக்கு சென்று வருகின்றனர்.

மேலும் சென்னையில் பணிப்புரிபவர்கள் தங்கள் வேலையை முடித்து விட்டு பெரும்பாலானவர்கள் கோயம்பேட்டிற்கு சென்று அங்கிருந்து பெரியபாளையம் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளுக்கு வருவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக ஊத்துக்கோட்டைக்கு வருவதற்கு பஸ்கள் இல்லாமல் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கு காரணம் 9 பஸ்கள் வெளியூரில் தங்கி விடுகிறது. மேலும் 7 பஸ்கள் திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி அனுப்பிவிடுகின்றனர்.  மேலும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மேல்மலையனூருக்கும், திருவண்ணாமலைக்கும் அனுப்பி விடுகின்றனர்.

இதனால் சென்னைக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்போது கோயம்பேடு, மாதவரம், செங்குன்றம் பகுதிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் ஊத்துக்கோட்டையில் இருந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லும் நேரத்திலும், வீடு திரும்பும் நேரத்திலும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்களை ஊத்துக்கோட்டையில் இருந்து செங்குன்றம் வரை இயக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

கூட்ட நெரிசலை குறைக்கலாம்: மாநகர பஸ் டிரைவர் கூறும்போது, `மாலை 4 மணிக்கு பள்ளி விடும் நேரத்திற்கு மாநகர பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. மாநகர பஸ்களில் வரும் மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர். இதை மாணவர்களிடம் கேட்டால் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வருகிறது. பின்னர் ஒரு சில மாணவர்கள் டிரைவரையும், பஸ் கண்ணாடிகளையும் உடைத்து விடுகின்றனர். பள்ளி விடும் நேரத்திற்கு ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை பணிமனையில் இருந்து பஸ்களை இயக்கினால் மாணவர்கள் கூட்ட நெரிசலை குறைக்கலாம்’ என்றார்.

கால தாமதம் தான் காரணம்: ஊத்துக்கோட்டை பணிமனை டிரைவர் கூறும்போது, `ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து பள்ளி விடும் நேரத்திற்கு கிராமங்களுக்கு சென்று மாணவர்களை விட்டு விட்டு வர மாலை 5.30 மணியாகிறது. இதனால் தான் பள்ளி நேரத்திற்கு செங்குன்றத்திற்கு பஸ்கள் இயக்க முடியவில்லை’ என்றார்.

Related Stories: