வீராபுரம் ஊராட்சி மகேந்திரா சிட்டி அருகே மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து கடைகள்: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: வீராபுரம் ஊராட்சி மகேந்திரா சிட்டி அருகே மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம் வீராபுரம் ஊராட்சியில், மகேந்திரா சிட்டி என்னும் சிப்காட் இயங்கி வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிய தினசரி ஆண்கள், பெண்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால், மகேந்திரா சிட்டி சாலையின் இரு புறங்களிலும் வணிக ரீதியாக டீக்கடை, ஓட்டல், பெட்டிக்கடை, பேக்கரி மற்றும் பழக்கடை என ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன.

சாலையின் இருபுறமும் உள்ள கடைகள் பெரும்பாலானவை ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டியுள்ளனர். மழைநீர் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். மேலும், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்ட பிறகும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைநீர் கால்வாய் மீது ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டுள்ள கடைகளால், கால்வாயை ஊராட்சி நிர்வாகம் பராமரிக்க முடியவில்லை.

இதனால், மழைக்காலங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெளியேற வழியில்லாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதோடு, பெரும்பாலான வீடுகளிலும் மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு வாசிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். கழிவுநீர் வெளியேறி மழைநீரோடு கலந்துவிடுவதால், நிலத்தடி மற்றும் கிணறு நீர் மாசுபடிந்து தண்ணீர் பிரச்னை ஏற்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் பருவ மழை துவங்க உள்ளது. எனவே, இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றி, வடிகால் கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கடைகளை அகற்றி, வடிகால் கால்வாய், கழிவுநீர் கால்வாய் ஆகியவற்றை உடனடியாக தூர்வார நடவடிக்கை  எடுக்கவேண்டும்.

Related Stories: