மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உதவியாளரின் தம்பி வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கோவை: கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உதவியாளரின் தம்பி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நண்பர்கள், பினாமி வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி. வேலுமணியின் நெருக்கமான நண்பரான கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான இன்ஜினியர் சந்திரசேகர் வீட்டில் கடந்த 8ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சொத்து மற்றும் நிறுவனங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கிடைத்தது. தொடர்ந்து எஸ்.பி. வேலுமணியின் நண்பரான சந்திர பிரகாஷின் பீளமேட்டில் உள்ள கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று 5வது நாளாக சோதனை நடந்தது. சந்திர பிரகாஷ் வசித்து வரும் பீளமேடு கொடிசியா வளாகம் அருகேயுள்ள அடுக்குமாடி அபார்ட்மென்ட் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆலயம் அறக்கட்டளை அலுவலகத்திலும் நேற்று சில மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. இதில் கடந்த 5 ஆண்டில் கேசிபி நிறுவனத்தினர் நடத்திய திட்ட பணிகள், வரவு செலவுகள் குறித்த ஆய்வு நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை முதல் குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நெருக்கமான உதவியாளர் சந்தோஷ் என்பவரின் தம்பி வசந்தகுமார் வீட்டில் வருமான வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நேற்று மதியம் வரை இந்த சோதனை நடந்தது. எஸ்.பி. வேலுமணியை சந்திக்க யார் சென்றாலும் சந்தோஷின் அனுமதி பெறவேண்டும்.

கட்சி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் சந்தோஷ் அனுமதி பெற்று எஸ்.பி. வேலுமணியை சந்தித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. வேலுமணியின் தொடர்பில் உள்ள நிறுவனங்கள், பினாமியாக செயல்படும் நிறுவனங்கள், முதலீடு செய்த நிறுவனங்கள் குறித்த விவரங்கள், சந்தோஷின் தம்பி வசந்தகுமாருக்கு தெரியும் என வருமான வரித்துறையினர் கருதினர். இதைத்தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், இன்ஜினியர் சந்திரசேகரிடம் உதவியாளராக இருப்பதாகவும், தனக்கு ஒதுக்கப்படும் பணிகளை செய்து தருவதாகவும் கூறியுள்ளார்.

இவர் பெயரில் உள்ள சொத்துக்கள், குடும்ப உறுப்பினர் பெயரில் உள்ள சொத்துக்கள் தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரித்தனர். வசந்தகுமார் அளித்த தகவல் அடிப்படையில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சந்திரசேகரின் தொடர்பில் உள்ள சில தொழில், வணிக, வர்த்தக நிறுவனங்களின் விவரங்கள் வருமான வரித்துறையினருக்கு கிடைத்துள்ளது. இந்த நிறுவனங்களையும் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். சில தொழில், கல்வி நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டில் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. இதில் பினாமியாக சிலர் இருப்பதாகவும், இதன் மூலமாக முதலீடு என்ற பெயரில் பெரும் தொகை குவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்களை நிர்வாகம் செய்யும் நபர்களிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: