அமர்நாத் யாத்திரையின்போது நிலச்சரிவில் உயிர் தப்பிய 25 தமிழர்கள் வருகை

சென்னை: அமர்நாத் யாத்திரையின்போது நிலச்சரிவில் உயிர் தப்பிய தமிழகத்தை சேர்ந்த 9 பெண்கள் உள்பட 25 பேர் சென்னைக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒட்டிய மலைப்பகுதியில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 9 பெண்கள் உள்பட 25 பேர் யாத்திரைக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் யாத்திரை முடிந்து திரும்பியபோது, கடந்த 2 நாட்களுக்கு முன் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் உயிர் தப்பிய தமிழகத்தை சேர்ந்த 25 பேரும் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஏர்இந்தியா விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் கடந்த 3ம் தேதி விமானம் மூலமாக சென்னையில் இருந்து புறப்பட்டோம். 4ம் தேதி அமர்நாத் யாத்திரை புறப்பட்டோம். அன்றிரவு பஞ்சதரணி முகாமில் தங்கினோம். மறுநாள் காலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்தோம். பின்னர் மலையில் இருந்து இறங்கும்போது மழை பெய்யத் துவங்கியது. உடனடியாக மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் நாங்கள் ஓயாத மழையில் செய்வதறியாது தவித்தோம். 4 மணி நேரத்துக்கு பிறகு மழை விட்டதும், நாங்கள் கீழே இறங்கி பஞ்சதருணி வந்தோம். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாதுகாப்பான பகுதிக்கு வந்து சேர்ந்தோம். அதன்பிறகு பஞ்சதரணியில் மழையினால் நிலச்சரிவினால் அடித்து செல்லப்பட்டதையறிந்து அதிர்ச்சி அடைந்தோம். எங்களை காப்பாற்றிய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கிறோம்’’ என்று கூறினர்.

Related Stories: