×

உடை மூலம் ஒருவரின் உடலமைப்பை மாற்ற முடியும்!

நன்றி குங்குமம் தோழி

ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா

‘‘ஆள் பாதி ஆடை பாதி என்ற சொல் உண்டு. ஒருவரை பார்த்தவுடன் அவர்கள் அணிந்திருக்கும் ஆடையை பார்த்துதான் அவர்களைப் பற்றிய எண்ணம் ஏற்படும். நல்லா படிச்சு, கைநிறை சம்பாத்தியம் இருந்தாலும், ஆடை சரியாக இல்லை என்றால் கண்டிப்பாக அருகில் இருப்பவர்கள் முகம் சுளிப்பார்கள். மேலும் நாம் பளிச்சென்று ஆடை அணிந்து இருக்கும் போது, நம்மை அறியாமல் நம் மனதில் ஒரு புத்துணர்வு ஒட்டிக் கொள்ளும்’’ என்று பேச ஆரம்பித்தார் கோவையை சேர்ந்த ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா. ஃபேஷனுக்காகவே தனி ஸ்டுடியோ ஒன்றை அமைத்திருக்கும் இவர் ஃபேஷன் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

‘‘நான் முழுக்க முழுக்க சென்னைவாசி. தி.நகரில் தான் வசித்து வந்தேன். எனக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் போதே ஃபேஷன் டிசைனராக வேண்டும் என்ற எண்ணம் மனதில் தொற்றிக் கொண்டது. அதற்கு காரணம் பிரபல பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன். நான் அவருடைய தீவிர ரசிகை. அவரின் அனைத்து பாடல்களையும் தொகுத்து வைத்து இருக்கேன். அவரின் பாடல்கள் போலவே அவர் அணியும் உடைகளுக்கும் மக்கள் மத்தியில் ஒரு கிரேஸ் இருந்தது. அப்போது நான் முடிவு செய்தேன், நான் ஒரு ஃபேஷன் டிசைனர் ஆனதும், அவருக்கு ஒரு ஜாக்கெட் தைத்து தரணும்ன்னு.

அந்த தாக்கம் தான் என்னை ஃபேஷன் உலகில் அழைத்து சென்றதுன்னு சொல்லலாம். என்னால் அவருக்கு தனிப்பட்ட முறையில் ஜாக்கெட் தைத்து தர முடியவில்லை. ஆனால் அவர் இறந்த பிறகு சென்னையில் அவருக்கான அஞ்சலி விழா நடைபெற்றது. அதில் அவர் அணிந்திருந்த அனைத்து ஜாக்கெட்டுகளையும் நான் வடிவமைச்சு காட்சிக்காக வைத்தேன்’’ என்றவர் திருமணத்திற்கு பிறகு தான் தன்னை ஃபேஷன் துறையில் ஈடுபடுத்திக்
கொண்டுள்ளார்.

‘‘நான் +2 முடிச்சதும் வீட்டில் கல்யாணம் செய்து கொடுத்திட்டாங்க. கல்யாணம், குடும்பம் என்று இருந்தாலும், எனக்கான ஃபேஷன் மோகம் குறையவே இல்லை. அதனால் திருமணத்திற்கு பிறகு ஃபேஷன் துறையில் டிப்ளமா சேர்ந்து படிச்சேன். படிக்கும் போதே அதற்கான பயிற்சி யும் எடுக்க ஆரம்பிச்சேன். நான் பயிற்சி எடுத்தவர்கள் எல்லாரும் தி.நகரில் சாலை ஓரங்களில் சிறிய அளவில் தையல் கடையினை வைத்திருப்பவர்கள் தான்.

அவர்கள் பிரபல தையல் நிபுணர்கள் எல்லாம் கிடையாது. ஆனால் அவர்களால் மட்டும் தான் ஒரு துணி கிழிந்தா அது தெரியாமல் மறைக்க தெரியும். அவர்களிடம் துணி மற்றும் தையல் சார்ந்து பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு ஒரு நடன பள்ளியின் நடன குழுவினருக்கு உடைகள் வடிவமைச்சுக் கொடுத்தேன்.

அவர்கள் மூலம் விளம்பர படங்கள் மற்றும் திரைப்படங்களில் வேலைப்பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. 32 விளம்பர படங்களில் மற்றும் 14 சினிமா திரைப்படங்களில் ஃபேஷன் டிசைனரா வேலைப் பார்த்திருக்கேன். ஒரு சில பிரபலங்களுக்கு நான் பர்சனல் டிசைனராகவும் இருந்தேன். ஆனால் என்னால் அந்த சக்சஸை அதிக நாட்கள் சுவைக்க முடியல. காரணம் எனக்கு பிசினஸ் செய்ய தெரியல’’ என்றவர் ஃபேஷன் உலகை துறந்து பள்ளியில் நிர்வாக துறையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

‘‘நாம் படிக்கும் பாடங்களுக்கும், நடைமுறைக்கும் சம்மந்தமே இருக்காது. அப்போது சின்ன பெண், அனுபவம் இல்லை. என்னுடைய திறமையால் முன்னேறினேனே தவிர நடைமுறைக்கு ஏற்ப எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. சொல்லப்போனால், எனக்கான ஒரு தையல் யூனிட்டே வைத்திருந்தேன். பிசினஸ் செய்ய தெரியாத ஒரே காரணத்தால் எனக்கு பிடித்த வேலையை முற்றிலும் துறக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். அந்த சமயத்தில் எனக்கு ஊன்றுகோளாக என் அப்பா தான் இருந்தார்.

வீழ்ந்தாலும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழு என்று எனக்கு தைரியம் கொடுத்தார். என்னை நான் சமாதானம் செய்து கொண்டு பள்ளி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அதே பள்ளியில் கல்லூரியும் இருந்தது. அவர்கள் ஃபேஷன் துறை ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருந்தனர். நான் ஏற்கனவே அந்த துறையில் இருந்ததால், என்னை அந்த துறையின் புரோகிராம் மேனேஜராக நியமித்தார்கள்.

சொல்லப்போனால், இந்த துறைக்கான மொத்த பாடத்திட்டங்களை நான் தான் வடிவமைத்தேன். என்னுடைய குழந்தைன்னு சொல்லலாம். நான் என் வாழ்க்கையில் சந்தித்த அனைத்து பள்ளங்களையும் இந்த துறையில் பயிலும் மாணவர்கள் சந்திக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். படிச்சு பட்டம் பெற்றவுடன் எல்லாமே தெரியுன்னு ஒரு ஆணவம் ஏற்படும்.

ஆனால் படிச்ச படிப்புக்கும் நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இந்த துறையில் புத்தகத்தில் படிப்பதை விட செயல்முறை பாடங்கள் நிறைய இருக்கும்படி வடிவமைத்தேன். படிப்பு மட்டுமில்லாமல், தலை முதல் பாதம் வரை எப்படி உடை அணியணும், அதற்கான அணிகலண்கள், செருப்புகள் ஏன் கைப்பைக்கூட எவ்வாறு இருக்கணும்ன்னு சொல்லிக் கொடுத்தேன்.

எல்லாவற்றையும் விட ஒரு உடை பார்க்க அழகாக இருக்கும். ஆனால் ேகமரா முன்னால் அதன் தோற்றம் வேறாக இருக்கும். கேமரா முன்னால் ஒரு உடை எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது குறித்தும் சொல்லித் தருகிறோம். இந்த ஐந்தாண்டு பயிற்சியில் அவர் எந்த சூழ்நிலையும் சமாளிக்கும் திறமையை வளர்த்துக் கொள்வார்கள் என்பதற்கு நான் கேரண்டி’’ என்றவர் கோவையில் ‘அப்ரோடைட்ஸ் டிரேப்’ என்ற பெயரில் ஒரு ஃபேஷன் ஸ்டுடியோவை துவங்கியுள்ளார்.

‘‘கடந்த வாரம் தான் என்னுடைய ஸ்டுடியோவை கோவையில் துவங்கினேன். இதற்கு முன் சென்னையில் ஒரு யூனிட் இருந்தது. நான் கோவையில் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்துவிட்டதால், சென்னையில் என்னால் சரியாக இயக்க முடியவில்லை. அதனால் கோவையிலேயே ஒரு ஃபேஷன் ஸ்டியோவை ஆரம்பிக்க நினைச்சேன். என் கல்லூரியில் படித்த சிலர் இப்போது என் ஸ்டுடியோவில் டிசைனராக வேலைப் பார்த்து வருகிறார்கள்.

மேலும் சென்னையில் இருந்த அந்த டெயிலரிங் யூனிட்டை அப்படியே கோவைக்கு ஷிப்ட் செய்திட்டேன். பலருக்கு எப்படி உடை அணியணும்ன்னே தெரியல. அப்படியே அணிந்தாலும், அதற்கான காலணிகள் மற்றும் அணிகலன்கள் சரியாக மெட்சிங் செய்ய தெரியல. ஒருவரை முற்றிலும் க்ரூமிங் செய்வது தான் எங்க ஸ்டுடியோவின் வேலையே. மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து தருகிறோம்’’ என்றவர் ஃபேஷன் துறையில் வேலைப்பார்த்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார்.

‘‘ஆரம்பத்தில் என் நண்பர்கள், உறவினர்களுக்கு தான் உடையை வடிவமைத்துக் கொடுத்தேன். வாய்வார்த்தையா தான் எனக்கான வாய்ப்பு என்னை தேடி வந்தது. நானாக யாரையும் நாடிப் போகவில்லை. அப்படித்தான் ஃபேஷன் ஷோ, விளம்பரம் மற்றும் சினிமா போன்ற துறைகளில் வேலைப் பார்க்கும் வாய்ப்பு வந்தது.

விளம்பரம் பொறுத்தவரை நிறுவனம் சார்ந்து தான் இருக்கும். அதாவது புடவை விளம்பரம் என்றால் உடைக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். அணிகலன்கள் இருந்தாலும், அது புடவையின் அழகை மறைக்காமல் பார்த்துக்கணும். சினிமாவின் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடையே தொடர்ச்சி அவசியம். சண்டைக் காட்சியில், உடை சேற்றில் நனைந்துவிட்டால், அடுத்த நாள் ஷூட் செய்யும் போது அதே ஷர்ட் தான் பயன்படுத்தணும். அப்பதான் காட்சி ஒன்றுக்கு ஒன்று மாறுபடாது.

ஃபேஷன் என்பது சினிமா, விளம்பரம் மட்டுமில்லை. நம் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இரவு நேர உடைகள் மிகவும் வசதியாக இருக்கும். ஆனால் அதை அணிந்து கொண்டு வெளியே போக முடியாது. அதே போல் பார்ட்டி மற்றும் திருமணம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு உடை உண்டு. இடத்திற்கு ஏற்ப ஃபேஷன் மாறுபடும். ஃபேஷனை ஏற்கனவே வடிவமைச்சு இருக்காங்க. நாம் அதை மேம்படுத்துகிறோம். பேன்ட் பேன்டா தான் இருக்கு. அதை கிழித்து விடுவது, முக்கால் வரை குறைப்பது, லூசாக அணிவது என நாமதான் நம்ம கிரியேட்டிவிட்டி மூலம் மாற்றி அமைக்கிறோம்.

மேலும் ஒரு உடை அணியும் போது, அது உங்களின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தணும். இப்போது பெண்கள் பலர் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க. எந்த வேலையாக இருந்தாலும் பளிச்சென்ற புன்னகை மற்றும் கண்களை உறுத்தாத உடைகளை அணிய வேண்டும். எல்லாவற்றையும் விட அணுகுமுறையும் மிகவும் அவசியம். ஒரு சிலர் கைகுலுக்கும் போது சும்மா கைவிரல்கள் மட்டுமே பற்றுவது போல் பிடிப்பாங்க. அப்படி இல்லாமல் உறுதியாக பிடிக்கும் போது நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர் என்று தெரியவரும்.

மேடையில் அமரும் போது கால் மேல் கால் போட்டோ அல்லது இரண்டு கால்களை விரித்தபடி அமரக்கூடாது. ஒருவரை நேருக்கு நேர் பார்த்து பேசும் போது அவர்கள் கண்களை பார்த்து பேசணும். கண்கள் அலைப்பாய்ந்தால் அவர்கள் செயலில் தெளிவில்லாதவர்களாக நினைக்கத் தோன்றும். சிலர் பார்க்கும் போதே அழுக்காக இருப்பாங்க. அவங்கள சுற்றியுள்ளவர்களை பற்றி கவலைப்படமாட்டாங்க. வெளித்தோற்றம் மிகவும் அவசியம்’’ என்றவர் எவ்வாறு உடைகளை அணிய வேண்டும் என்று டிப்ஸ் கொடுத்தார்.

‘‘டஸ்கி நிறமுள்ளவர்களுக்கு எந்த நிற உடை அணிந்தாலும் நன்றாக இருக்கும். அதே சமயம் கண்களை பறிக்கும் நிறங்களை தவிர்ப்பது நல்லது. பிங்க் நிறம் பிடிக்கும் என்பதால் அதில் பஞ்சுமிட்டாய் நிற பிங்க் தேர்வு செய்யணும்ன்னு அவசியம் இல்லை. பிங்கில் நிறைய ஷேட்கள் உள்ளது. அதில் உங்களுக்கு எது சரியா இருக்கும்ன்னு பார்த்து தேர்வு செய்யலாம்.

அதே போல் காலணிகள் ஹீல்ஸ் போட்டால், கிளட்ச் கைப்பைகள் தான் பயன்படுத்தவேண்டும். பிளாட் செருப்பு என்றால் சாதாரண ஹேண்ட்பேக் நல்லா இருக்கும். பெரிய கம்மல் போட்டா கழுத்தில் செயின் அணிய தேவையில்லை. செயின் அணிந்தால், பெரிய கம்மல் போடக்கூடாது. பெண்கள் எந்த உடை அணிந்தாலும் தோள்பட்டை எலும்பு தெரியும் படி அணிந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

அதே போல் அகண்ட முதுகு கொண்டவர்கள் டீப் நெக் கொண்ட பிளவுஸ் அணியலாம். குண்டாக இருப்பவர்கள் ஹாரிசாண்டல் ஸ்ட்ரைப்ஸ் உடைகளை தவிர்த்து, வெர்டிக்கல் ஸ்ட்ரைப்ஸ் உடை அணிந்தால், அவர்களை ஒல்லியாக எடுத்துக்காட்டும். இவ்வாறு நாம் அணியும் உடை மூலம் அவர்களின் உடலமைப்பை மாற்ற முடியும்’’ என்றார். ஃபேஷன் குறித்த ஆலோசனைக்கு 9791257878  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

செய்தி: ஷம்ரிதி

படங்கள்: சதீஷ்

Tags :
× RELATED நிர்வாகத் துறையிலுருந்து சினிமா வரை…