×

வாழ்வென்பது பெருங்கனவு- கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!

நன்றி குங்குமம் தோழி

இயற்கை மருத்துவர் உஷாரவி

தமிழகத்தின் தலைநகரமாக இருந்திருக்க வேண்டிய கடலூர் மாநகரத்தின் சிறப்புகள் ஏராளம்! மதுரை, தேனி, லஷ்மிபுரம், புதுப்பட்டி மண்ணில் அவதரித்து இந்தியாவெங்கும் பயணித்ததோடு உலக அரங்கிலும் அக்குபங்சர் துறையால் திரும்பி பார்க்கவைத்தவர் பேராசிரியை மருத்துவர் உஷாரவி. அவரின் வாழ்வே கனவாகியபோது,  அதை வாழ்க்கையின் வெற்றிக்கான பெருங்கனவாக மாற்றி வாழ்வென்பது வளமானது என நிரூபித்துள்ளார்.

“தஞ்சை மருத்துவ கல்லூரியில் பார்மசி படிக்கும்போது டாக்டர் என்னும் ஆசை வெறும் ஆசையாகவே நீடிக்குமோ என பயந்தேன். ஆனால் எனது விடாமுயற்சி மற்றும் கணவரின் முழுமையான ஒத்துழைப்பு எனது பெருங்கனவை நிஜமாக்கி கடந்த 29 வருடங்களாக இயற்கை மருத்துவ முறைகளால் மக்களின் ஆரோக்கியம் காப்பதில் நான் பங்கெடுத்து வருகிறேன்’’ என்ற உஷாரவி தஞ்சை பார்மசி மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து இலங்கை அக்குபங்சர் பல்கலைக்கழகத்தில் அக்குபங்சர் பயின்றுள்ளார். மேலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இயற்கை மருத்துவம், யோகா பட்டயம் பெற்று தமிழ்நாடு  எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றுள்ளார். இருப்பினும் படிப்பின் மேல் உள்ள ஆர்வமும், இயற்கை மருத்துவம் சார்ந்த தேடல்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

‘‘ஆரம்பத்தில் இயற்கை மருத்துவத் துறையில் நான் முதன் முதலில் கால் பதித்த போது, பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆனால் நான் துவண்டுவிடாமல் என் கணவரின் உதவியுடன் வாரம் ஒரு விழிப்புணர்வு முகாம், மாதம் ஒரு இலவச சிகிச்சை முகாம் என ஓய்வின்றி எங்களின் சேவைகளை தொடர்ந்தோம். பலன் கடுகளவுதான் என்றாலும் அதற்கான எதிர்ப்புகளோ பாதாள அளவு! எனினும் எள்ளளவும் கலங்கவில்லை, துவண்டுவிடாமல் மீண்டும் மீண்டும் துடிப்புடன் வீறுகொண்டு செயலாற்றினோம். இந்த இடத்தில் நான் ஒன்றை குறிப்பிட வேண்டும்.

எனது தந்தை விமானப் படையில் பணியாற்றியவர். போர் கால நேரத்திலும் அவர் தன் சேவையை நாட்டு மக்களுக்காக செய்துள்ளார். எதிரிகளை வீழ்த்தி ஜெயிக்க வேண்டும் என்ற போர் குணம் அவருள் எப்போதும் இருக்கும். நானும் அவரைப் போல் தான். எத்தனை முறை வீழ்ந்தாலும், முழுமனதோடு போராடினால் கண்டிப்பாக வெற்றிக் கனியை சுவைக்க முடியும் என்று அப்பா அடிக்கடி சொல்வார்.

அந்த வாக்கு தான் என்னை எழ வைத்தது. எங்க ஊர் மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு கிடைத்த போது என்னுள் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மேலும் என் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் மேலும் மேலும் என்னை ஊக்கப்படுத்தினார்கள்’’ என்றார். 2000ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அக்குபங்சர் கருத்தரங்கில் பங்குபெற்ற உஷாவின் கட்டுரைக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

‘‘நம் உடலில் ஒவ்ெவாரு இடங்களிலும் பிரஷர் பாய்ன்ட் உள்ளது. அதை நாம் தூண்டும் போது தானாகவே நம் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு ஒரு தீர்வாக அமைகிறது. குழந்தை பேறு அறுவை சிகிச்சைக்கு பின் தாய் பல உடல் உபாதைகளை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது. அதற்கான தீர்வு குறித்து உலக அளவில் முதல் முறையாக BYPASS ACUPUNCTURE என்ற ஆய்வுக்கட்டுரையில் தீர்வினை வழங்கினேன். இதனை சீனாவில் நடைபெற்ற உலக அக்குபங்சர் கருத்தரங்கில் சமர்ப்பித்தேன்.

என்னுடைய ஆய்வுக் கட்டுரையை பாராட்டி எனக்கு தங்கப்பதக்கம் அந்த கருத்தரங்கில் வழங்கப்பட்டது. அத்தோடு நில்லாமல் அது குறித்து நான் பயிற்சியும் எடுத்தேன். அதன் மூலம் சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு அக்குபங்சர் முறையில் சிகிச்சை அளித்தேன். குணப்படுத்தியதுடன், குழந்தையில்லாத பெண்கள் மற்றும் PCOD குறைபாடுள்ளவர்களுக்கும் அக்குபங்சர் சிகிச்சையுடன் அலோபதி சிகிச்சை சேர்ந்து எடுத்துக் கொள்ளும்போது நல்ல பலன் கிடைக்கும்.

மாற்றங்கள் தானாக நிகழாது, நம்மிடம் இருந்துதான் முதலில் தொடங்க வேண்டும். அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் நிலையானாதாகவும், தொடர்ந்து நீடிக்கும்’’ என்றவர் இயற்கை மருத்துவத்துறையில் தேனி போல் ஒவ்வொரு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

‘‘மருத்துவத்துறை கடல் போன்றது. ஒவ்வொரு காலக்கட்டம் மற்றும் ஆய்வின் போதும் புதிய மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அவை அனைத்தையும் தேனீ எப்படி தேனைத் தேடி சேகரிக்கிறதோ அதே போல், மருத்துவம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் தேடிக் கொண்டே இருக்கிறேன். இதுவரை 25க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளேன். தமிழக அரசின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் (இயற்கை) மருத்துவ ஆய்வறிக்கையின் பொறுப்பாளராக உள்ளேன்.

நான் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு வளர்ச்சியிலும் எனது பங்கைவிட என் கணவர், மகள், உறவினர்கள், நண்பர்கள்... என பலரின் பங்கு அதிகம். 500க்கும் மேற்பட்ட இயற்கை மூலிகை மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளேன். நோய்க்கான தீர்வு மருந்துகள் மட்டுமே தீர்வாகாது, அவர்கள் எதிர்கொள்ளும் மனப் போராட்டங்களுக்கு ஆறுதலான வார்த்தைகள் மற்றும் சரியான சிகிச்சை முறைகள் மிக மிக முக்கியம்.

கடந்த 29 வருடங்களில் பல்லாயிரம் நோயாளிகளை அவர்களின் நோயின் பிடியிலிருந்து மீட்டுள்ளேன். அதற்கு முக்கிய காரணம் என்னால் முடியும் என்று என் மேல் நம்பிக்கை வைத்த என் கணவரின் மனஉறுதி தான் என்னை இவ்வளவு தூரம் கடந்து வர செய்துள்ளது. வெற்றி என்பது நிரந்தரமானதல்ல! அதனை அடைய நிரந்தரமாக உழைப்பது மட்டுமே வெற்றி” என நிறைவாக பேசி முடித்தார் உஷா ரவி.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED நிர்வாகத் துறையிலுருந்து சினிமா வரை…