சென்னை எல்லை சாலை திட்டம் மூலம் எண்ணூர் - பூஞ்சேரி 200 அடி சாலை திட்டத்துக்கு நிலம் அளவீடும் பணி தீவிரம்

மாமல்லபுரம்: சென்னை எல்லை சாலை திட்டம் மூலம் எண்ணூர் - பூஞ்சேரி 200 அடி சாலை திட்டத்துக்கு நிலம் அளவீடும் பணி தீவிரம் நடந்து வருகிறது. சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்க்கும் பொருட்டு. எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி பூஞ்சேரி சந்திப்பு வரை 133 கிமீ நீளத்தில் சென்னை எல்லை சாலை அமைய உள்ளது. இதில், 97 கிமீ புதிய சாலையாகவும், 36 கிமீ தற்போதுள்ள சாலைகளை மேம்படுத்தும் வகையில் 200 அடி சாலை அமைக்கப்பட உள்ளது. கடந்த, 2020ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையின்போது சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்ப்பதற்காக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சந்திப்பு வரை 200 அடி சாலை அமைய உள்ளதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி பகுதியில், நிலம் எடுப்பு திருப்போரூர் தனி வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையில், ஓய்வு பெற்ற நில அளவை துணை ஆய்வாளர் மணி வண்ணன் உள்ளிட்ட பலர் நேற்று நிலம் அளவீடு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கூறுகையில், சென்னை பெருநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்க்க, சென்னை எல்லை சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் மூலம் எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள் கோயில் வழியாக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 200 அடி சாலை அமைய உள்ளது. இதில், ஏற்கனவே சாலைகள் உள்ள இடங்களில் சாலை அகலபடுத்தும் பணியும் நடக்கும். மேலும், பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்கு இடையூறு ஏற்படாமல், சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, நிலம் அளவீடு பணி துரிதமாக நடக்கிறது. இதையடுத்து, நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கும் என்றனர்.

Related Stories: