சுற்றுலா தலமாக மாற்றும் பணி கிடப்பு ஆக்கிரமிப்புகளால் பாழாகும் காக்களூர் ஏரி: மழைநீரை சேமிப்பதில் சிக்கல்

திருவள்ளூர்: ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள காக்களூர் ஏரியை மீட்டு, சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவள்ளூர் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர்  வசித்து வருகின்றனர். திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில், காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி 194 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில், 4 மதகுகள், 2 கலங்கள் உள்ளன. இந்த ஏரியில் 15 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். திருவள்ளூர் நகராட்சி எல்லையோர பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு, மாடி வீடு, ஓட்டு வீடு, குடிசை வீடு என 195 நபர்கள் காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். இவர்களுக்கு, கடந்த 2018ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க வருவாய்த்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அந்த பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த ஏரியை சுற்றுலா தலமாக்கும் வகையில் தூர்வாரி, சீரமைத்து நடைபாதை, மின்விளக்கு, இருக்கைகள் போன்ற பொழுதுபோக்கு இடமாக மாற்றவும், ஏரியில் படகு சவாரி விடுவதற்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்பேரில், கடந்த 2013ம் ஆண்டு இந்த ஏரியை சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற முடிவு செய்து, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இந்த பணிகள் மேற்கொள்வதற்காக அப்போதைய சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி நிர்வாகம் மற்றும் காக்களூர் ஊராட்சி நிர்வாகம் இணைந்து நமக்கு நாமே திட்டம் மூலம் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதற்காக பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ.30 லட்சம் திரட்டப்பட்டது.

அதை தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சி திட்டம் மூலம் ரூ.60 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வாகனங்கள் செல்லும் சாலையோரம் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபாதை அமைக்கவும், படகு தளம் மற்றும் ஏரியின் மையப் பகுதியில் படகில் இருந்து இறங்கி, பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் மேட்டுப்பகுதி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அனைத்து பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. அதே நேரத்தில் ஏரிக்கரையோரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சாலையோரத்தில் உணவு விடுதி நடத்துபவர்கள் ஆகியோர் கழிவுநீரை காக்களூர் ஏரியில் விடுவதால் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம் உள்ளது.   

மேலும், ஏரியில் அல்லி செடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுவதால், ஏரியின் மதகுகள், கலங்கல்கள் இருந்த இடமே தெரியாத நிலையில் உள்ளது. அதனால், மழைக்காலங்களில் போதிய நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 முதல் 40 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது 100 அடியாக குறைந்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் கோடை காலங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படுவதுடன், விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏரிக்கரையில் நடைபாதை அமைக்கவும், படகு தளம் மற்றும் ஏரியின் மையப் பகுதியில் படகில் இருந்து இறங்கி, பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் மேட்டுப்பகுதி அமைக்கவும்  முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த பணிகள் நடைபெறாமல் கிடப்பில்  போடப்பட்டது.

* விரைவில் நடவடிக்கை

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘காக்களூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து மீண்டும் கணக்கீடு செய்து, அவற்றை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஏரியை தூர்வாரி சீரமைத்து, சுற்றுலா தலமாக மாற்றும் பணிகள் மேற்கொள்வது குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

* சமூக விரோத செயல்கள்

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருக்கும் நபர்களில் சிலர் தங்களது வீடுகளில் கஞ்சா, சாராயம் போன்றவற்றை விற்பதுடன், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வரும் போதை ஆசாமிகளால், சுற்றுப்பகுதி மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தம் போலீசார் கண்டுகொள்ளவில்லை,’’ என்றனர். 

Related Stories: