×

பெண் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய சட்டம் குற்றவாளிகளை காப்பாற்றுகிறதா...?

“ஆடைகளோடு குழந்தைகள்/ சிறுமிகளின் மார்பகத்தை தொடுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது” என்று சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அளித்த  தீர்ப்பு  விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. போக்ஸோ (POCSO Act) - Protection of Children from Sexual Offences. இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்துவரும் சட்டம். இந்த சட்டத்தின் பிரிவு 7 மற்றும் 8 படி, குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, அல்லது மற்றவர்களின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொட வைப்பது குற்றம்.

குற்றவாளி களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.
இதேபோல் இந்திய தண்டனை சட்டம் 354 (IPC 354), ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவது, தாக்க முனைவதும் குற்றமாகும். இதற்கு இரண்டு ஆண்டுகள் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

போக்ஸோ சட்டத்தின் முக்கிய நோக்கமே குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் மற்றும் குற்றங்களை குறைத்து அவர்களை பாதுகாப்பது. ஆடைகள் மற்றும் ஆடை இல்லாமல் குழந்தைகளை பாலியல் ரீதியாக தொட்டாலும், அது குற்றம்தான். அதே போல், சொற்கள் வழியாக தவறான எண்ணத்துடன் அணுகுவது கூட குற்றம். அதற்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுப்பதற்கான சட்டங்கள் என, இவை அனைத்திலும் நேரடியாக அல்லாமல் பாலியல் ரீதியாகவும் எந்த விதமான தாக்குதல் (verbal or non verbal) நடத்தினாலும் அது குற்றமாகும் என்று சட்டம் சொல்கிறது.  

இது போன்ற சட்டங்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கொண்டு வந்திருந்தாலும், அவற்றை அமல்படுத்துவதில் நம் நாடு ஏற்கனவே பலவீணமானதாக இருக்கிறது. முதல் கட்டமாக நிறைய குற்றங்கள் சொல்லப்படுவதில்லை. புகார்களும் அளிக்கப்படுவதில்லை. இரண்டாவதாக புகார் அளிக்கப்பட்ட குற்றங்களில் பெரும்பாலான குற்றங்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படுவதுமில்லை. இதுதான் நாட்டின் இன்றைய நிலை.  இப்படி இருக்க இந்த வழக்கின் மூலம் வந்திருக்கும் தீர்ப்பின் மூலம், இப்படி ஒரு விஷயத்தை திணித்தால், இப்போது கிடைத்து கொண்டிருக்கக் கூடிய சொற்ப நீதிகூட இனிமேல் கிடைக்காமல் போகக்கூடிய அபாயம் இருக்கிறது.

2019ஆம் ஆண்டில் தேசிய குற்ற பதிவு பணியகத்தில் (என்.சி.ஆர்.பி) இருந்து கிடைத்த தரவு படி, 2016ல், குழந்தைகளுக்கு எதிராக 106,958 குற்றங்களை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இவற்றில் 36,022 வழக்குகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2016 இல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 89% விசாரணை நிலுவையில் உள்ளன. என்.சி.ஆர்.பி தரவுகளின்படி, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 90% க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2016ல் 29.6% வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் 60 நாட்கள் காலக்கெடுவுடன், விரைவு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவு பிறப்பித்தது. 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மாநிலங்களவையில் மசோதாவை அறிமுகப்படுத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க வழிவகுக்காது என்ற கருத்தும் நிலவுகிறது.

மேலும் தப்பியவர்கள் மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய சட்ட சேவைகள் ஆணையம், (நல்சா) சிறப்பு நீதிமன்றங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டியாக செயல்படும் என்று உச்சநீதிமன்ற பெஞ்ச் 2018 இல் தீர்ப்பளித்ததோடு போக்ஸோ சட்டத்தின் கீழ் இழப்பீட்டு விதிகளை உருவாக்குமாறு அரசை கேட்டுக் கொண்டிருந்தது. திருத்தத்திற்குப் பிறகும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. குழந்தை இறந்தால் யாருக்கு இழப்பீடு கிடைக்கும் என்று மசோதாவில் கூறப்படவுமில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் இடைவெளிகளும் உள்ளன.

உதாரணமாக, 2013 முதல் 2018 வரை, தமிழகத்தின் 25 மாவட்டங்களில் போக்ஸோவின் கீழ் 3,153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களில் 95 பேருக்கு மட்டுமே இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டது என்று, தகவல் அறியும் சட்டத்தின் கீழ், அரசு சாரா அமைப்பு ஒன்று கணக்கிட்டுள்ளது. இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க குழந்தைகளுக்கான உரிய பாதுகாப்பினை தேசம் தர வேண்டும். நாம் சொல்லும் வார்த்தைகள் குழந்தைகளுக்கு புரியாமல் போகலாம்... ஆனால், ஒருவர் தன்னை துன்புறுத்துகிறார், தன் விருப்பத்திற்கு மாறாக அல்லது தன்னை வேறு விதமாக பயன்படுத்துகிறார் என்பதை அந்த குழந்தையால் உணர முடியும்.

இது போன்று சிறு வயதில் பாதிக்கப்படும் குழந்தைகள் உளவியலாக பாதிக்கப்படுகிறார்கள். அந்த பிரச்சினைகளில் இருந்து, பின் நாட்களில் கூட அவர்களால் மீள முடியாமல் போகிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.

Tags : girl children ,
× RELATED மயிலாடுதுறையில் ‘பெண் குழந்தைகளை காப்போம்’ மினி மாரத்தான்