இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா.. கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என 54 பேர் பதவி விலகிய நிலையில் முடிவு

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என இங்கிலாந்து ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் துணை கொறடாவாக இருந்த எம்.பி. கிறிஸ் பின்சர், கடந்த புதன்கிழமை இரவு கேளிக்கை விடுதியில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் எம்பி. பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், நிதி அமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் தங்கள் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தனர்.

இதனால் போரிஸ் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், அடுத்த சில மணி நேரத்தில் நதீம் சஹாவியை புதிய நிதி அமைச்சராகவும், ஸ்டீவ் பார்க்லே சுகாதார அமைச்சராகவும் நியமித்தார். இந்த நியமனங்களை போரிஸ் செய்த அடுத்த சில மணி நேரத்தில், உயர்கல்வி அமைச்சர் வில் குயின்ஸ், பள்ளிக் கல்வி அமைச்சர் ராபின் வால்கர் ஆகியோர் பதவி விலகினர். மேலும், போக்குவரத்து துறை அமைச்சரின் உதவியாளரும் எம்பி.யுமான லாரா ட்ரோட்டும் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்தடுத்து 48 மணி நேரத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள், உயர் அதிகாரிகள் என 54 பேர் பதவி விலகினர்.

இதனால் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனது பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார். அக்டோபரில் நடைபெறும் கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

Related Stories: