அடிப்படை கட்டமைப்பு, பேராசிரியர்கள் இல்லாத நிலையில் தமிழகத்தில் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

சென்னை: அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் குறைபாடுகளை 2 வாரத்திற்குள் சரி செய்தால் மட்டுமே நடப்பாண்டில் அங்கீகாரம் வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் 476  தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கடந்த மே , ஜூன் மாதங்களில், ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழகம், 225 கல்லூரிகளில் உரிய உட்கட்டமைப்பு வசதிகள், தகுதியான பேராசிரியர்கள், உரிய கட்டமைப்பு இல்லாததை கண்டறிந்துள்ளது.

இதையடுத்து அந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விரைவில் பொறியியல் சேர்க்கை கவுன்சலிங் தொடங்க உள்ள நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள விஷயம், தமிழகத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் அதன் உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் தவிர 476 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அகில இந்திய தொழில் நுட்பகல்வி கழக (ஏஐசிடிஇ) விதிகளின் படி ஒவ்வொரு கல்லூரியிலும் நடத்தப்படுகின்ற பாடப்பிரிவுகளுக்கு உரிய அங்கீகாரம் பெற வேண்டும். எத்தனை பாடப் பிரிவுகள் நடத்தப்படுகிறதோ அந்த பாடப்பிரிவுகளுக்கு ஏற்ற வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள் பணியிடங்கள் இருக்க வேண்டும். மேலும், எந்த அந்தந்த மாநிலங்களில் உள்ள தொழில் நுட்ப பல்கலைக் கழகங்களில் இணைப்பும் பெற்றிருக்க வேண்டும்.

இந்த விதிகளின்படி தமிழகத்தில்  கடந்த சில ஆண்டுகளுக்கு 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வந்தன. அவற்றில் அடிக்கடி நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கு பிறகு சுமார் 44 கல்லூரிகள் போதிய வசதிகளை பூர்த்தி செய்யவில்லை என்று கூறி ஏஐசிடிஇ அங்கீகாரம் வழங்க மறுத்தது. அதனால் அந்த கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது 476 கல்லூரிகள்தான் இயங்கி வருகின்றன. இவற்றில் நடத்தப்படுகின்ற பாடப்பிரிவுகளுக்கு போதிய ஆசிரியர் பற்றாக்குறை நீடித்து வருகிறது. அவற்றில் படிக்கின்ற மாணவர்கள் தரப்பில் இருந்து, அந்த கல்லூரிகள் மீது தெரிவிக்கப்பட்ட புகார்களின் பேரில் 2022-2023ம் ஆண்டுக்கான அங்கீகாரம் புதுப்பித்த 476 பொறியியல் கல்லூரிகளில்  அண்ணா பல்ககலைக் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவினர், மே, மற்றும் ஜூன் மாதங்களில்,நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டது.

குறிப்பாக ஆர்க்கிடெக்சர், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை நடத்தும் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தகுதியில்லாத ஆசிரியர்கள் பணியாற்றுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வுக் கூடங்கள் மற்றும் அவற்றில் உபகரணங்கள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர இதர பொறியியல் கல்லூரிகளிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த ஆய்வில், 225 கல்லூரிகளில் போதிய வசதிகள், விதிகளின் படி ஆசிரியர்கள் நியமனங்கள் பின்பற்றப்படவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக 50 சதவீத கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்த வசதிகளை பூர்த்தி செய்யவில்லை. மேற்கண்ட கல்லூரிகளில் 62 கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை.

அடிப்படை வசதிகள், ஆய்வுக் கூடங்களுக்கான தரவரிசை 50 புள்ளிகள் பெறுவதற்கு பதிலாக 62 கல்லூரிகள் 25 சதவீதம் புள்ளிகளைத்தான் பெற்றுள்ளன. 23 பொறியியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ள முதல்வர்கள் தகுதியில்லாதவர்களாக இருக்கின்றனர். அதனால் தகுதியுள்ள முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீதத்துக்கும் கீழ் முரண்பாடுகள் உள்ள கல்லூரிகள் மீதான புகார்களுக்கு விளக்கம் அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 166 கல்லூரிகள் அங்கீகாரம் பெற்றிருந்தும் 25 சதவீதத்துக்கும் கீழே அடிப்படை வசதிகள், ஆசிரியர் நியமனங்களை கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அந்த கல்லூரிகள் இரண்டு  வாரத்துக்குள் உரிய விளக்கம் அளிக்கவும், விதிகளின்படி அடிப்படை வசதிகள் செய்தல், உரிய ஆசிரியர்களை நியமித்தல் ஆகியவற்றை செய்ய வேண்டும், இல்லை என்றால் அந்த கல்லூரிகளின் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும், தவறினால் அந்த கல்லூரிகளின் பெயர் பட்டியல் பகிரங்கமாக வெளியிடப்படும் என்றும், இரண்டு வாரங்களில் குறைகளை சரிசெய்ய வேண்டும், என்றும் எச்சரித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட குறைகளை சரி செய்ய 19ம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில், அவற்றை சரிசெய்யவில்லை என்னும் பட்சத்தில் அந்த கல்லூரிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டால், பிஇ, பிடெக் சேர்க்கை கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள் அந்த கல்லூரிகளில் சேர மறுப்பார்கள். அதன் மூலம் மேற்கண்ட பொறியியல் கல்லூரிகள் பாதிக்கப்படும் அல்லது மாணவர்கள் சேர்க்கையின்றி மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். கடந்த ஆண்டு நடந்த பிஇ, பிடெக் சேர்க்கையில் பல கல்லூரிகளில் மாணவர்கள் சேரவில்லை என்பதால் அந்த கல்லூரிகளின் இடங்கள் அண்ணா பல்கலைக் கழகத்துக்கே திரும்ப ஒப்படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. 23 பொறியியல் கல்லூரிகளில்

நியமிக்கப்பட்டுள்ள முதல்வர்கள் தகுதியில்லாதவர்களாக இருக்கின்றனர்.

Related Stories: