×

மூன்று உலக சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ள வேலூரின் சூப்பர்வுமன்!

வேலூரை அடுத்து, கன்னியம்பாடி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த வினோதினி சுதேஷ், மூன்று உலக சாதனைகள் படைத்து  தன் ஊருக்கே பெருமை சேர்த்துள்ளார். சாதாரண  குடும்பத்தில் இரண்டு தங்கைகள், ஒரு தம்பியுடன் பிறந்த வினோதினி, படிப்பில் சுமார்தான் என்கிறார். ஆனால் தினமும் செய்திகளில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நிகழும் கொடுமைகள் அவரை பெரிதும் பாதித்து வந்துள்ளது. ஹைதராபாத்தில் மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் படுகொலையால் அதிர்ச்சியில் உறைந்த வினோதினி, இது போன்ற வன்முறைகளுக்கு எதிராக தன்னால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவெடுத்தார்.

இதைப் பற்றி நண்பர்களிடம் விசாரித்த போது,  உலக சாதனைகள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தால், அதற்கான விழிப்புணர்வும், வரவேற்பும் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து, ஜனவரி 14, 2019ல் - குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து ‘‘பெண் குழந்தைகளைக் காப்போம்” என்கிற தலைப்பில், நூறு விதமான ஓவியங்களை நூறு சார்ட் பேப்பர்களில் ஏழு மணி நேரம் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்காக கலாம் உலக சாதனை ரெகார்ட்ஸ் பட்டியலில் இடம்பெற்றார்.

அதையடுத்து, மது அருந்துதலின் தீமைகளை எடுத்துரைக்கும் விதமாக, மார்ச் 15, 2019ல், மது ஒழிப்போம் என்ற தலைப்பில்,  நூறு பீர் பாட்டில்களில் வாசகங்களுடன் கூடிய ஓவியங்களை வரைந்துள்ளார். நான்கு மணி நேரம் 20 நிமிடங்களுக்குள் வரைந்து உலக சாதனையை நிகழ்த்தினார். சமீபத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ஏ.பி.ஜே  அப்துல் கலாம் அவர்கள் இயற்றிய அக்னி சிறகுகள் புத்தகத்தை, ஆறு மணி நேரம், 33 நிமிடங்கள் 33 வினாடிகளில் வாசித்து ஜெட்லி புக் ஆஃப் ரெகார்ட்ஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்தார்.

இந்த சாதனைகள் அனைத்தும் அவர் நிகழ்த்த, வேலூர் ‘தி ப்ரிட்ஜ்’ அறக்கட்டளையும், பெற்றோர்கள், நண்பர்கள் எனப் பல வழிகாட்டிகள் உறுதுணையாக இருந்ததாக வினோதினி தெரிவிக்கிறார். இவருக்கு மார்ச் 8 உலக பெண்கள் தினத்தில், 2020கான சிறந்த பெண் சாதனையாளர் விருதை ஜெட்லி புக் ஆஃப் ரெகார்ட்ஸ் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. கொரோனா லாக்டவுனிலும், முயற்சி தளராமல், வீடியோவில் தன் சாதனைகளை பதிவிட்டு அனுப்பியதிலும், விருதுகளும் சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.

இவருடைய சாதனைகளுக்கு உறுதுணையாகப்  பல மகளிர் குழுக்கள் மற்றும் சமூக அமைப்புகளும் நிதி வழங்கி உதவியுள்ளனர். வேலூரில் தனியார் மருத்துவக் கல்லூரியில் க்ரிட்டிகல் கேர் தெரபி படித்து முடித்து, அக்கல்லூரியின் மருத்துவமனையிலேயே ஐந்தாண்டுகளாக வேலை செய்து வரும் வினோதினி ஒரு சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலகளவில் சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். தொடர்ந்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து விழிப்புணர்வு செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

‘‘நான் ரொம்ப சாதாரண பொண்ணுதான். வீட்டிலும் கொஞ்சம் சோம்பேறிதான்” எனச் சிரிக்கும் வினோதினி, “எங்க வீட்டில் என்னுடைய சாதனைப் பற்றி சொன்ன போது யாருமே நம்பல. சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை பார்த்த பிறகு தான் எல்லாரும் நம்பினாங்க. அது வரை பொழுதுபோக்கிற்காக ஏதோ செய்கிறேன்னு தான் நினைச்சிட்டு இருந்தாங்க. ஊடகங்களில் என்னைப் பற்றி செய்தி வெளியாகவும் நான் மேலும் சாதனைகள் படைக்க வேண்டும் என்று ஊக்குவித்து வருகிறார்கள்.

தொடர் சாதனைகளை நிகழ்த்தி வரும்  வினோதினிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ‘‘பெண்கள் படிப்பை மட்டும் விடவேக் கூடாது. முடிந்த வரை நண்பர்களாகவே இருந்தாலும் எளிதில் யாரையும் நம்ப வேண்டாம். யாருக்காகவும் உங்கள் திறமைகளை முடக்கிக் கொள்ள வேண்டாம். என்னைப் பற்றி செய்தி, வெளியானதைப் பார்த்து, எங்க ஊரில் பெண்கள் இது போன்ற சாதனைகள் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். எங்கள் கிராம மக்களிடையே கொஞ்சம் விழிப்புணர்வும் உருவாகி இருக்கிறது’’ எனப் பெருமிதம் பொங்கக் கூறுகிறார் வினோதினி.

Tags : Superwoman ,Vellore ,
× RELATED நன்னடத்ைத உறுதிமொழி பத்திரம் அளித்த 262...