ஆலோசனை கேட்பது போல் நடித்து வாஸ்து நிபுணர் குத்திக் கொலை: கர்நாடகாவில் பயங்கரம்

பெங்களூரு: வாஸ்து நிபுணரிடம் ஆலோசனை கேட்பது போல் நடித்த மர்ம நபர்கள், கத்தியால் குத்தி அவரை படுகொலை செய்தனர். கர்நாடகா மாநிலம், ஹூப்பள்ளி உணகல் சாலையில் ‘பிரசிமென்ட்’ என்ற பெயரில் தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் பிரபல வாஸ்து நிபுணர் சந்திர சேகர் தங்கி இருந்தார். நேற்று பகல் 12.45 மணி அளவில் அவரிடம் ஆலோசனை கேட்பதற்காக சிலர் வந்திருந்தனர். ஓட்டல் வரவேற்பாளரிடம் வாஸ்து நிபுணர் எந்த அறையில் இருக்கிறார் என்பதை கேட்டுக் கொண்டு அவரை சந்திப்பதற்கு சென்றனர். அவர் தங்கி இருந்த அறைக்கு சென்றதும், திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த சந்திரசேகர் அலறி கீழே சாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் கிடைத்த மாநகர போலீஸ் கமிஷனர் லாபுராம் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார். அத்துடன் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது 2 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஓட்டலுக்கு வருவதும் சிறிது நேரத்திற்கு பிறகு ஓட்டலில் இருந்து வெளியே செல்வதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* மும்பைக்கு தப்ப முயன்ற கொலையாளிகள்

சந்திரசேகரை கொன்றவர்கள் மும்பைக்கு தப்பி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது, ராமதுர்கா தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்த மகந்தேஷ், மஞ்சுநாத் ஆகிய இருவரை மடக்கி கைது செய்தனர். சந்திரசேகரின் அலுவலகத்தில் மகந்தேசும், அவருடைய மனைவி வனசாட்சியும் வேலை செய்துள்ளனர். இவருக்கும் திருமணம் நடத்தி வைத்த சந்திரசேகர், திருமண பரிசாக தனி பிளாட் ஒன்றையும் வழங்கியுள்ளார். இந்நிலையில், சந்திரசேகர் நிறுவனத்தில் இருந்து விலகிய மகந்தேஷ், எதற்காக அவரை கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: