கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு கூட்டம்: தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு

கும்மிடிப்பூண்டி: தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், ஒன்றிய ஆணையர் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் விரிவாக்கத்திற்கு ஒன்றிய அனுமதி கோரிய  தீர்மானம் குறித்து காங்கிரஸ் கவுன்சிலர் மதன்மோகன் ேபசுகையில், `தனியார் தொழிற்சாலை ஏற்கனவே விதிமுறைகளை மீறியுள்ளது.

அந்த  தொழிற்சாலையின் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்பட்டு சுற்றுசூழல் மாசடைய காரணமாக உள்ளது. இந்த தொழிற்சாலையை முறையாக நடத்தக்கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளிக்க இயலாது’ என்றார். இதற்கு சக கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்து இந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கவுன்சிலர்களின் ஒப்புதல் இல்லாமல் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படாது என ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தெரிவித்தார்.

பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரவிக்குமார் பேசும்போது, `ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகள் வராமல், 2, 3 பேர் வருவதால் மக்கள் பிரச்னைகளை அதிகாரிகள் முன் தெரிவிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. சிறுபுழல்பேட்டையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு நகர பேருந்து சேவையை மீண்டும் இயக்கவேண்டும். அதிகரித்து வரும் மின் வெட்டினை சரிசெய்யவேண்டும். ஜி.ஆர்.கண்டிகை ஊராட்சியில் மக்கள் பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. அரசு திட்டங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு துறை அதிகாரிகள் தகவல் தெரிவிப்பதில்லை’ என்றார். இந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, ஜெயச்சந்திரன், அமலா சரவணன், ஜோதி அதிமுக கவுன்சிலர்கள் ரோஜா ரமேஷ்குமார், ஆரோக்கியமேரி, சுயேச்சை கவுன்சிலர் டி.கே.வி.உஷா, பாமக கவுன்சிலர் மணிமேகலை கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: