லட்சுமி நாராயணன் தீர்த்த குளத்தை ஆக்கிரமித்துள்ள கருவேல மரம், செடிகளை அகற்ற கோரிக்கை

ஸ்ரீமுஷ்ணம் :  ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் அருகே நித்திய புஷ்கரனி எதிர்புறம் லட்சுமி நாராயணன் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலின் எதிர்புறம் தீர்த்தகுளம் அமைந்துள்ளது. ஏற்கனவே இந்த தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராடி லட்சுமி நாராயணனை வழிபாடு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்த தீர்த்த குளத்திற்கு நித்தியபுஷ்கரனியில் இருந்து மழைக் காலங்களில் உபரிநீர் வரும். தற்போது இந்த தீர்த்த குளத்தை சுற்றி கருவேல மரங்கள், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து குளமே தெரியாத அளவிற்கு உள்ளது.

இதனால் அசுவத்தநாராயணன் கோயிலில் போர்வெல் அமைத்தும் அதன் மூலம் வரும் நீர் துர்நாற்றம் வீசுவதால் பேரூராட்சி மூலம் வரும் நீரை அக்கோயிலுக்கு பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த தீர்த்த குளத்தை சுற்றியுள்ள கருவேல மரம், செடி, கொடிகளை அகற்றி குளத்தை தூய்மைபடுத்த வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் தீர்த்தகுளத்தை சரிசெய்யுமாறு கோரிக்கை விடுத்ததை முன்னிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார். ஆனால் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: