பென்னாகரம் அருகே பரபரப்பு பஞ்., தலைவரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்-சுகாதாரமற்ற குடிநீரால் 30 பேர் பாதிப்பு

பென்னாகரம் : ஏரியூர் அருகே சுகாதாரமற்ற குடிநீரை பருகிய 30க்கும் மேற்பட்டோர் ,உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து, நேற்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள நாகமரை ஊராட்சிக்கு உட்பட்ட ஏமனூரில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மூன்று பக்கம் மேட்டூர் நீர்த்தேக்கத்தாலும், ஒரு பக்கம் அடர்ந்த வனப்பகுதியாலும் சூழப்பட்டுள்ள இந்த பகுதிக்கு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு காலை, மாலை வேளைகளில் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ஏமனூரை சேர்ந்த மக்கள் மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக, 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரியூர் அல்லது காவிரி ஆற்றைக் கடந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். ஏமனூர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த தொட்டி தற்போது இடிந்து விடும் நிலையில் உள்ளது. இந்த தொட்டியை சுத்தம் செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. சுத்தம் செய்யப்படாத இந்த தொட்டியின் மூலம், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த குடிநீரில் புழு, பூச்சிகள் மிதப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சுகாதாரமற்ற நீரை பயன்படுத்தியதால், இந்த கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு ஏரியூர், பென்னாகரம், மேட்டூர், சேலம் உள்ளிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கூறினால், அலட்சியத்துடன் பதில் சொல்லும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து,  இப்பகுதி மக்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

குடிநீர் தேவையை தீர்க்க மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டும், உடனடியாக மருத்துவ முகாம் அமைத்து அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும், 10 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழுநேர மருத்துவரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஏரியூர் போலீசார் விரைந்து சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: