கணவனுடன் தகராறு மனைவி தீக்குளித்து தற்கொலை

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி சுந்தரம் பவர்லைன் 5வது தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன்(40). இவரது மனைவி காயத்ரி(35), கேட்டரிங் வேலை செய்து வருகிறார். காயத்ரியின் முதல் கணவர் சாந்தகுமார் என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு காயத்ரி இரண்டாவதாக முருகனை திருமணம் செய்துகொண்டார். காயத்ரிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். காயத்ரி கேட்டரிங் வேலை செய்வதால் அடிக்கடி வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் குடித்துவிட்டு காயத்ரியை சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த காயத்ரி வீட்டிலிருந்த மண்ணெண்ணயை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இதில் தலை முதல் கால் வரை தீப்பற்றி கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் முருகன் ஆகியோர் தீயை அணைக்க முற்பட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து காயத்ரியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 90% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த காயத்ரி நேற்று அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயத்ரியை காப்பாற்ற முயன்ற முருகனுக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. புகாரின்படி வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: