வடமாநில தொழிலாளர்களை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறையை வகுக்க வேண்டும்

சென்னை: வடமாநில தொழிலாளர்களை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறையை வகுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனி பிரிவில் தேசிய முன்னேற்ற கழக தலைவர் ஜி.ஜி.சிவா அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளூர் தொழிலாளர்களுக்கு பணி வழங்கியதை எதிர்த்து, அங்கு பணிபுரியும் வடமாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நூற்பாலை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தனியார் நூற்பாலை நிர்வாகம், உள்ளூர் தொழிலாளர்கள் சிலரை கொண்டு ஆலையை தொடர்ந்து இயக்கி வருகின்றனர். இதன் காரணமாக பல ஆண்டுகளாக இங்கு பணிபுரியும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, வடமாநில தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலத்தவர்களால் தமிழர்களின் வாழ்வதாரமும் எதிர்காலமும் கேள்வி குறியாகியுள்ளது. ஆகவே, வடமாநில தொழிலாளர்களை கட்டுபடுத்த வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வகுக்க வேண்டும்.

Related Stories: