நுபுர் சர்மாவை ஆதரித்து பதிவு வெளியிட்ட டெய்லரை கொன்றவர் பாஜ.வை சேர்ந்தவரா? ஆதாரங்களை வெளியிட்டு காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: ராஜஸ்தானில் நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்து வெளியிட்டதற்காக டெய்லர் கன்னையா லால் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள முக்கிய குற்றவாளியான ரியாஸ் அக்தாரி, பாஜ.வை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்களை காங்கிரஸ் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய நுபுர் சர்மாவை ஆதரித்து சமூகவலைதளங்களில் பதவி போட்டதால், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மால்டாஸ் பகுதியை சேர்ந்த கன்னையா லால் என்ற டெய்லர், கடந்த மாதம் 28ம் தேதி 2 பேரால் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை செய்து வீடியோ வீடியோ வெளியிட்ட ரியாஸ் அக்தாரி, கோஸ் முகமது ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இவர்களில் ரியாஸ் அக்தாரிக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தாவுத்-இ-இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும், பல்வேறு கொலைகளில் ஈடுபட்டு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரியாஸ் அக்தாரி, பாஜ.வின் உறுப்பினர் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா நேற்று அளித்த பேட்டியில், ‘டெய்லர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான ரியாஸ் அக்தாரி பாஜ.வை சேர்ந்தவர். அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர். இவன் ராஜஸ்தானை சேர்ந்த பாஜ தலைவர்களான இர்ஷாத்  செயின்வாலா, முகமது தாஹிர் ஆகியோருடன் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் சிக்கியுள்ளன. ராஜஸ்தான் பாஜ  தலைவரும், முன்னாள் அமைச்சருமான குலாப்சந்த் கட்டாரியாவின் நிகழ்ச்சிகளில் இவன்  அடிக்கடி பங்கேற்றுள்ளான். இது மட்டுமின்றி, பாஜ.வின் ராஜஸ்தான் சிறுபான்மை  பிரிவின் கூட்டங்களில் ரியாஸ் அக்தாரியின் பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு, நவம்பர் 30ம் தேதி பாஜ தலைவர் இர்ஷாத் செயின்வாலா, பிப்ரவரி 3, 2019, அக்டோபர் 27, 2019, ஆகஸ்ட் 10, 2021, நவம்பர் 28, 2019 தேதிகளில் முகமது தாஹிர் ஆகியோர் வெளியிட்ட பேஸ்புக் பதிவுகளில் இந்த புகைப்படங்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்  மவுனம் காப்பது ஏன்? பாஜ.வும், அதன் தலைவர்களும் நாட்டில் மதவெறி சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்கிறார்களா? நாட்டை ஒருமுகப்படுத்துவது மூலம் பாஜ ஆதாயம் பெற முயற்சிக்கிறதா? இந்த வழக்கை என்ஐஏ.க்கு  மாற்றியதை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வரவேற்றுள்ளார். இருப்பினும், புதிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில்தான், இந்த வழக்கை என்ஐஏ.க்கு ஒன்றிய அரசு அவசர அவசரமாக மாற்றியதா? இவ்வாறு அவர் கூறினார்.

* பாஜ திட்டவட்ட மறுப்பு

பாஜ சிறுபான்மை பிரிவின் ராஜஸ்தான் மாநில தலைவர் முகமது சாதிக் கான் அளித்த பேட்டியில்,  ‘எந்த தலைவருடனும் யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அதற்காக அவர் பாஜ.வை சேர்ந்தவர் என்று அர்த்தமில்லை. அவர் கட்சி நிகழ்ச்சிகளுக்குச் சென்று உள்ளூர் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம். பேஸ்புக், இதர சமூக வலைதளங்களில் தலைவர்கள் அல்லது பிரபலங்களின் புகைப்படங்களைப் பதிவேற்றுவது வழக்கமான ஒன்று. இதை குற்றச்சாட்டாக கூறுவதை ஏற்க முடியாது. கன்னையா லாலுக்கு அச்சுறுத்தல் இருந்தும், பாதுகாப்பு வழங்காத ராஜஸ்தான் அரசின் தோல்வியைதான் இந்த படுகொலை காட்டுகிறது,’ என்று தெரிவித்தார்.

* நுபுர் சர்மாவை ஆதரித்த மேலும் ஒருவர் கொலை?

நுபுர் சர்மாவை ஆதரித்து மகாராஷ்டிரா மாநிலம், அமராவதியை சேந்த உமேஷ் கோல்ஹே என்பவரும் சமூக வலைதளங்களில் பதவிட்டு இருந்தார். இவர் கடந்த மாதம் 21ம் தேதி, தனது கடையில் இருந்து வீட்டுக்கு திரும்பியபோது மர்ம நபர்களால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு இருந்தார். இதுவும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் செய்தது போல் இருந்தது. நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதவிட்ட கன்னையா லால் 22ம் தேதி கொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்த நாட்களில் 2 கொலைகளும் நடந்துள்ளதாலும், கொலை செய்யப்பட்ட விதமும் ஒரே மாதிரியாக இருப்பதாலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையை போலீஸ் மூடி மறைக்க முயற்சிப்பதாக பாஜ குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில், கன்னையா லால் கொலையுடன் சேர்த்து, உமேஷ் கொலை வழக்கையும் சேர்த்து விசாரிக்கும்படி என்ஐஏ.வுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டு இருக்கிறார்.

* நுபுர் சர்மாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ்

முகமது நபிகள் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நுபுர் சர்மா மீது நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிடும்படி நுபுர் சர்மா தொடர்ந்த ரிட் மனுவை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் நாட்டையே தீக்கிரையாக்கி விட்டதாக கண்டித்தது. இந்நிலையில், நுபுர் சர்மாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, கொல்கத்தா போலீசார் நேற்று லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளனர்.

Related Stories: