தமிழில் முதன்முதலாக மொழிபெயர்க்கப்பட்ட சரபோஜி மன்னர் கையெழுத்திட்ட ‘பைபிள்’ லண்டனில் கண்டுபிடிப்பு

சென்னை: தஞ்சாவூர் சரபோஜி மன்னர் ஆட்சி காலத்தில் கடந்த 1715ம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் சாக்சானி நகரை சேர்ந்த மதபோதகர் பார்த்தோலோமேயூ சீகன் பால்க் என்பவர், டென்மார்க் நாட்டு மன்னரின் வேண்டுகோளை ஏற்று அப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் டச்சு காலனி வசம் இருந்த போது ‘புதிய அத்தியாயம்’ என்ற பெயரில் பைப்பிளை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார். அது அச்சிடப்பட்டு முதல் புத்தகத்தை அப்போது தஞ்சாவூர் மன்னர் சரபோஜிக்கு பரிசாக வழங்கப்பட்டது. பைபிளின் முதல் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் சரபோஜி கையெழுத்திட்டார்.  பிற்காலத்தில் இந்த அரிய வகை பைபிள் தமிழக அரசால் கைப்பற்றப்பட்டு தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்த விலை மதிப்பில்லாத அரிய வகை பைபிள் கடந்த 10.10.2005ம் ஆண்டு காட்சிக்கு வைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் இருந்து மாயமானது. இதுகுறித்து சரஸ்வதி மகால் அருங்காட்சிய நிர்வாகம் சார்பில் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய பல்வேறு கட்ட விசாரணையில் அரிய வகை பைபிள் மாயமானது குறித்து கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கண்டுபிடிக்க இயலாத வழக்காக முடிக்கப்பட்டது. இந்நிலையில், மாயமான பைபிள் குறித்து கடந்த 17.10.2017ம் ஆண்டு யானை ராஜேந்திரன் என்பவர் சிலை திருட்டு தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அரிய வகை பைபிள் குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு எஸ்பி ரவி தலைமையில் இன்ஸ்பெக்டர் இந்திரா ஆகியோர் கொண்ட தனிப்படையினர், பைபிள் மாயமான அருங்காட்சியகத்தின் பார்வையாளர் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 7.10.2005ல் சில வெளிநாட்டினர் அருங்காட்சியகத்திற்கு வந்து சென்றது தெரியவந்தது. மதபோதகர் பார்த்தோலொமஸ் சீகன் பால்க் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிக்காக ஒரு குழுவாக வந்த வெளிநாட்டினர், மதபோதகர் பார்த்தோலொமஸ் சீகன் பால்க் சம்பந்தப்பட்ட இடங்களையும், அவர் தொண்டாற்றிய நிறுவனங்களையும் பார்வையிட்டு சென்றது தெரியவந்தது. பிறகு தனிப்படையினர் வெளிநாட்டில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களின் இணையதளங்கள் வழியாக மாயமான அரிய வகை பைபிளை தேடினர்.

அப்போது, லண்டனில் கிங்ஸ் கலெக்‌ஷன் என்ற அருங்காட்சியகத்தின் வலைத்தளத்தில், தஞ்சை மகால் நூலக அருங்காட்சியகத்தில் மாயமான 17ம் நூற்றாண்டில் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டிருந்த ஒரு அச்சகத்தில் அச்சிடப்பட்ட தஞ்சை மன்னர் சரபோஜி கையெழுத்தோடு கூடிய பைபிள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் பல்வேறு புலன் விசாரணையில் தஞ்சை மகால் நூலக அருங்காட்சியகத்தில் இருந்து மாயமான அரிய வகை பைபிள் தான் என்று சிலை திருட்டு தடுப்பு பிரிவு தனிப்படையினர் உறுதி செய்தனர். அதைதொடர்ந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி மூலம் யுனேஸ்கோ ஒப்பந்தத்தின்படி பைபிளை திரும்ப கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: