மாதந்தோறும் பணம் கட்டியும் பயன் இல்லை வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இருக்கு தண்ணீர் தான் வருவதில்லை; தவிப்பில் புழல் பகுதி மக்கள்

புழல்: புழல் கண்ணப்ப சாமி நகர், காவாங்கரை, கன்னடபாளையம், சக்திவேல் நகர், திருநீலகண்ட நகர், காஞ்சி அருள் நகர், தமிழன் நகர், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர், சக்திவேல் நகர், கிருஷ்ணா நகர், புழல் கடைவீதி, அண்ணா நினைவு நகர், புனித அந்தோணியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் தெருக்களில் உள்ள பொது குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் கடந்த சில மாதங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டும் குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் தண்ணீர், இதுவரை வரவில்லை. குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இணைப்பு வழங்கியும் தண்ணீர் வழங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டால், ‘குடிநீர் மேல்நிலை தொட்டி பணி முடியும் தருவாயில் உள்ளது. முடிந்த பிறகு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு சீராக வழங்கப்படும்’ என்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த அதிமுக ஆட்சியில், புழல் கண்ணப்ப சாமி நகர், புழல் மகளிர் மத்திய சிறைச்சாலை அருகில் உள்ள 2 ராட்சத குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படவில்லை. மேலும் பல பகுதிகளில் குடிநீர் பைப்லைன் பணிகள் மந்த கதியில் நடக்கிறது. தற்போது 3 இடங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் இருந்து தெருக்களில் உள்ள குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த பைப் லைனும் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தண்ணீர் வீணாகிறது.

குடிநீர் வாரிய ஊழியர்களும் சரி செய்து வருகிறார்கள். இதை அகற்றி விட்டு புதிய பைன் அமைக்க வேண்டும். வீட்டு இணைப்புக்காக மாதம் தோறும் குடிநீர் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் குடிநீர் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். அதுபற்றி கேட்டால், குடிநீர் மேல்நிலை தொட்டி பணி முடிந்ததும் வழங்குவோம் என்கிறார்கள். உடனடியாக அந்த பணியை முடித்து விட்டு குடிநீர் விநியோகம் செய்ய மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: