போதைப்பொருள் விற்ற வழக்கு 2 பேருக்கு தலா 12 ஆண்டு ஒருவருக்கு 7 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கொளத்தூர் செந்தில் நகரில் இருசக்கர வாகனங்களில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு கடந்த 2020 பிப்ரவரி 22ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேரை மடக்கி, சோதனை செய்ததில் அவர்களிடம் இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் 20 கிராம் மெத்தா பெட்டமின், 250 எல்.எச்.டி. போதை மாத்திரைகள், 50 மெதிலின் டைஆக்சி மெத்தா பெட்டமின் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் போதைப்பொருட்களை வைத்திருந்த கொளத்தூரை சேர்ந்த வசந்தகுமார் (23), நிஷாந்த் ராயன் (22), பாலச்சந்தர் (23) ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜராகி, மூவர் மீதான குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடனும், சாட்சியங்களுடனும் எடுத்துரைத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் வசந்தகுமார் மற்றும் நிஷாந்த் ராயன் ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.2.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாலச்சந்தருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: