200 ஏக்கர் விவசாயம் பாதிப்பு 7 ஆண்டாக மடை கட்டாமல் இழுத்தடிப்பு: உடனடியாக அமைக்க விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை: சிவகங்கை அருகே கவுரிப்பட்டியில் பழுதான மடையை பராமரிக்காததால் 200 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.சிவகங்கை அருகே கவுரிப்பட்டி ஊராட்சியில் கவுரி கண்மாய் உள்ளது. சுமார் 25 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் மூலம் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனம் செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் கவுரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பயனடைந்து வந்தனர்.இக்கண்மாய்க்கு மூன்று மடைகள் உள்ளன. இதில் நடுமடையே பிரதான மடையாகும். இந்த மடை மூலமே விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சப்பட்டது.

இந்நிலையில் மூன்று மடைகளும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு நடுமடை மட்டும் புதிதாக கட்டப்பட்டது. ஆனால் அந்த ஆண்டில் பெய்த கனமழையின் போது மடை மழை நீரில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் மடை முற்றிலும் இல்லாமல் போனது. மடை நீரில் அடித்துச்செல்லப்பட்டதை அப்போதைய மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக சரி செய்யப்படும் என கூறினர். ஆனால் 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்ச வழி இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பகுதியில் கன மழை பெய்தும் கண்மாயில் விவசாயத்திற்கு தேவையான அளவிற்கு முழுமையாக நீர் இருந்தும் நீரை பாய்ச்ச வழி இல்லாமல் விவசாயம் செய்யாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.விவசாயிகள் கூறுகையில், பல ஆண்டுகளாக மடைகள் சேதமடைந்த நிலையில் புதிய மடை 2015ல் கட்டப்பட்டது.

ஆனால் ஒரு மழைக்கே தாக்குப்பிடிக்காத தரம் குறைவான கட்டுமான பணியால் மடை முழுவதுமாக நீரில் அடித்துச்செல்லப்பட்டது. முன்பாவது இருக்கும் மடையை வைத்து நிலங்களுக்கு ஓரளவு நீர் பாய்ச்சி வந்தோம். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக நீரை பாய்ச்ச வழியில்லாமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். தொடர்ந்து விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. உடனடியாக மடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: