பட்டாபிராமில் சுகாதார மையத்தை தரம் உயர்த்த கோரிக்கை

ஆவடி: நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார மையத்தை  அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என  மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  ஆவடி மாநகராட்சியில் 11 வார்டுகளை கொண்ட பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியேறி வருகின்றனர். மேலும், பட்டாபிராம் பகுதியை இரண்டாக பிரித்து, பட்டாபிராம் பிரதான சாலை மற்றும் தண்டரை என மக்கள் அழைத்து வருகின்றனர். தற்போது பட்டாபிராம் பகுதியில் தமிழகத்தின் 3வது டைடல் பார்க் உருவாகி வருகிறது. மேலும், ரூ52.11 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, பட்டாபிரமில் அடுத்த மாதம் போக்குவரத்து காவல் நிலையம் துவங்கப்படுகிறது. எனினும், இப்பகுதி மக்களின் மருத்துவ வசதிக்காக, தண்டரையில் ஒரே ஒரு நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார மையம் பகுதி நேரமாக மட்டுமே இயங்கி வருகிறது.

இதனால் இங்கு அவசர, ஆபத்து சமயங்களில் அரசு மருத்துவமனை இல்லாததால், சுமார் 4 கிமீ தொலைவில் உள்ள ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மக்கள் சிகிச்சை பெறவேண்டிய அவலநிலை உள்ளது. மேலும், இந்த ஆரம்ப சுகாதாரமையத்தில் அனைத்து நோய்களுக்கான சிகிச்சை, பரிசோதனைகள் நடைபெறுவதில்லை. இங்கு பெரும்பாலும் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் உரிய சிகிச்சையின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தை 24 மணி நேரமும் இயங்கக்கூடிய, அனைத்து நவீன மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறும் வகையில் அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்

Related Stories: