மெட்ரோ ரயில் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளி பலி: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை மடிப்பாக்கம் அருகே மெட்ரோ ரயில் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி மடிப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் வரை நடைபெற்று வருகிறது. இதில் ஆதம்பாக்கத்தையடுத்த உள்ளகரத்தில் மெட்ரொ ரயில் பணி நடைபெற்று வருகிறது. அங்கு கழிவுநீர் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சேலத்தை சேர்ந்த ரவி எதிர்பாராத விதமாக மண் சரிவில் சிக்கி 12 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார். அவரை அரைமணி நேர போராட்டத்துக்கு பின் மீட்ட சக தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் ரவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர், சக தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: