திருவள்ளூர் அருகே அதிமுக ஆட்சியில் ஆக்கிரமிப்பு செய்த ஏரியை மீட்டுத்தரக் கோரி விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர்: அதிமுக ஆட்சி காலத்தில் ஆக்கிரமிப்பால் மாயமான ஏரியை மீட்டுத்தர வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூரை அடுத்த கைவண்டூர் கிராமத்தில் 172 ஏக்கர் பரப்பில் அமைந்திருந்த ஏரியை நம்பி 750 ஏக்கர் பரப்பில் விவசாயம் நடைபெற்று வந்தது. ஆனால் சட்டவிரோதமாக ஏரியை சமன் செய்து மனைகளாக பிரித்து விற்றதாலும், மணல் எடுத்தது மற்றும் செங்கல் சூளை அமைத்தது போன்ற காரணங்களால் ஏரி இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய் விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஆக்கிரமிப்புகளால் வாழ்வாதாரம் பறிபோனதாக விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயத்தை கைவிடும் அவல நிலையில் இருந்து காப்பாற்றினால் குடிநீர் ஆதாரமும் மேம்படும் என்று விவசாயிகள் கூறினர். விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் நிலையை மாற்ற ஏரியை தமிழக அரசு மீட்டு தர வேண்டும் என கைவண்டூர் கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் காரைக்குடியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே உள்ள 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை வேலிபோட்டு செய்திருந்த ஆக்கிரமிப்பை வருவாய்த்துறை அலுவலர்கள் அகற்றிவிட்டனர். இதனிடையே புதுக்கோட்டையில் கூட்டுறவு மொத்தவிற்பனை பண்டக சாலைக்கு சொந்தமான 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 2148 சதுர மீட்டர் மனை மற்றும் அதில் உள்ள கிடங்கை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயன்றவர்கள் குறித்து நிலஅபகரிப்பு சிறப்பு காவல் பிரிவினரிடம் சார்பதிவாளர் திரு.சுல்தான்மைதீன் ஜவகர் புகார் அளித்தார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் 58 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் சிலர் பெயர்மாற்றம் செய்ததாக, 5 பேர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் புதுக்கோட்டையை சேர்ந்த போஸ், சாலை அபிஷேகன், ராஜமாணிக்கம், கண்ணன், சரவணன், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் ஆகிய 6 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.               

Related Stories: