சென்னை விமான நிலையத்தில் ஒரே சமயத்தில் 2 ரன்வே இயக்கும் பணி தீவிரம்: ஒருமணி நேரத்தில் 50 விமானங்களை இயக்கலாம்; அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒரேநேரத்தில் 2 ரன்வேக்களை இயக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாடு விமானங்கள் தரையிறங்க, புறப்பட என 2 ஓடுபாதைகள் (ரன்வே) உள்ளன. முதல் ரன்வே 3.66 கி.மீ., 2வது ரன்வே 2.89 கி.மீ., இதில் முதல் ரன்வேயில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி புறப்படுகின்றன. 2வது ரன்வேயில் ஏடிஆர் எனும் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, இங்கு ஒரு மணி நேரத்தில் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவற்றை 50 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு வசதியாக 2 ரன்வேக்களையும் மாற்றியமைக்க விமானநிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: சென்னை விமான நிலையத்தில் முதல் ரன்வே பிரதானமாக பயன்படுகிறது. 2வது ரன்வே பகுதியான கொளப்பாக்கத்தில் உயர்ந்த அடுக்குமாடி கட்டிடங்கள், செல்போன் டவர்கள் போன்ற தடைகள் காரணமாக முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. தற்போது முதல் ரன்வேயில் ஏதேனும் பிரச்னை என்றால், 2வது ரன்வே பயன்பாட்டில் இருந்து வருகிறது. முன்னதாக, முதல் ரன்வே அளவுக்கு 2வது ரன்வேயின் நீளத்தை அதிகரிக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்தது.

எனினும், அதற்கு தேவையான நிலங்களை அப்போதைய மாநில அரசு கையகப்படுத்தி தரவில்லை. இதனால் 2வது ரன்வேயின் நீளத்தை அதிகரிக்கும் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இயக்கத்தை துரிதப்படுத்த இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் உள்ள 2 ரன்வேக்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கும் பணிகளை விமானநிலைய நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

ஒரே நேரத்தில் 2 ரன்வேக்களில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்து கட்டுப்பாட்டு அறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது சென்னை விமானநிலையத்தின் முதல் ரன்வேயில் ஒரு மணி நேரத்தில் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இங்கு 2 ரன்வேக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, ஒரு மணி நேரத்தில் 50 விமானங்கள் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இங்கு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததும், வரும் ஜூலை மாதம் 2வது ரன்வே முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: