எண்ணூரில் ரூ.3 கோடியில் நவீன நூலகம்: கே.பி.சங்கர் எம்எல்ஏ ஆய்வு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 2வது வார்டு எண்ணூர் கத்திவாக்கம் பஜார் தெருவில் மாவட்ட கிளை நூலகம் உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கல்வி மற்றும் பொது அறிவு சம்பந்தமான நூல்களை படித்து பயன்பெற்று வருகின்றனர். ஆனால் இங்கு போதிய அடிப்படை வசதி இல்லை. இதையடுத்து இந்த நூலகத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் சட்டப்பேரவை கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து நவீன வசதியுடன் கூடிய நூலகம் கட்ட அரசு திட்டமிட்டு இதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் மேம்பாட்டு நிதி ரூ.1 கோடி மற்றும் சிஎஸ்ஆர் நிதி என சுமார் ரூ.3 கோடி திட்ட மதிப்பீட்டில் முதல் தளத்துடன் கூடிய நூலகம் கட்டப்பட உள்ளது.

இந்நிலையில், தற்போது இயங்கிவரும் நூலகத்தை கே.பி.சங்கர் எம்எல்ஏ, கவுன்சிலர் கோமதி சந்தோஷ்குமார், வாசகர் வட்ட நிர்வாகி பாண்டியன் ஆகியோருடன் சென்று பார்வையிட்டார். அப்போது புத்தகம் படிக்க வந்த வாசகர்களுடன் அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்டார். அப்போது `வெகு விரைவில் நூலக அலுவலக கட்டுமான பணி தொடங்கப்படும். வட சென்னையிலேயே நவீன வசதியுடன் கூடிய நூலகமாக இது செயல்படும். கணினி அறையுடன் ஐஏஎஸ்ஐபிஎஸ், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவர்கள் தொழிலாளர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் புத்தகங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: