பி.இ.க்கு புதிய பாடத்திட்டம் ஜூலை முதல் அமல்: அண்ணா பல்கலை அதிகாரிகள் தகவல்

சென்னை: பொறியியல் (பிஇ) கல்விக்காக மாற்றியமைக்கப்பட்ட புதிய சிறப்புப் பாடத்திட்டம் வருகிற ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டு, தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள், பல்வேறு துறை பேராசிரியர்கள் என  90 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட உள்ள இந்த புதிய பாடத்திட்டமானது, தற்போதைய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப வடிமைக்கப்படவுள்ளது. சர்வதேச அளவிலான தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களின் பாடங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, அதற்கேற்ப புதிய பாடத் திட்டம் உருவாக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார். அதன்படி மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டமானது, வருகிற ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மின்சார வாகனங்கள், ரோபோட்டிக்ஸ், தூய ஆற்றல் தொழில்நுட்பங்கள், நவீன இயக்க அமைப்புகள், தரவு அறிவியல், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட வளர்ந்துவரும் 40 நவீன துறைகளை உள்ளடக்கி புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், இன்டர்நெட் ஆப் திங்ஸ் மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவை கட்டாய பாடங்களாக இருக்கும். மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் நிபுணத்துவம் பெறுவதற்காக ஆறு மாத இன்டர்ன்ஷிப்பைப் பெற அனுமதிக்கப்படுவார்கள்.

பொறியியல் மாணவர்கள் பரந்த துறைகளில் தேர்ச்சி பெற முடியாமல் திணறி வருகின்றனர். இந்த நடவடிக்கையால் அவர்கள் தங்கள் துறையில் திறனை மேம்படுத்தி வேலை பெற முடியும். மாணவர்கள் தங்கள் ஸ்ட்ரீமில் ஒரு வளர்ந்து வரும் பகுதியை நிபுணத்துவம் பெற தேர்வு செய்யலாம். ஐந்து மற்றும் ஆறாவது செமஸ்டர்களில், மாணவர்களின் நிபுணத்துவத்திற்கு ஏற்ப எட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்கள் வரை படிக்க அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான சிறப்புப் பாடத்திட்டத்தின் விவரங்கள் ஜூலையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: