என் பூமி - என் மரம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் என் பூமி என் மரம் என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கி மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் என் பூமி - என் மரம் என்ற திட்டத்தின் கீழ் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, அம்மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படுவது குறித்து கண்காணிக்கப்படும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மரக்கன்றுகளுடன், அம் மரக்கன்றுகளை பராமரிப்பதற்கான அட்டைகளையும் வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இதே போல் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் இராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பூபால முருகன், தேன்மொழி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: