அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் வாழ்வாதார சேவை மையம் திறப்பு

மதுராந்தகம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கிளியாநகர், கீழாமூர், பாதிரி ஆகிய ஊராட்சிகளின் ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு வாழ்வாதார சேவை மையம் திறப்பு விழா கீழாமூர் கிராமத்தில் நடந்தது. ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மகளிர் உதவி திட்ட அலுவலர் வீரசேகரன் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட வட்டார மேலாளர் தானப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மகளிர் திட்ட இயக்குனர் ராமநாதன் கலந்து கொண்டு மகளிருக்கு மீன் வளர்ப்பு, ஆடு, மாடு வளர்ப்பு, பஞ்சகாவியம், இயற்கை உரம், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவை தயாரிப்பு பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் கிளியாநகர், கீழாமூர் மற்றும் பாதிரி ஆகிய ஊராட்சிகளில் பெண்கள் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, இயற்கை முறையில் விவசாயம் மற்றும் நெல் சாகுபடியாளர்கள் குழு உருவாக்கப்படும். இந்த குழுவில் உள்ள பெண்களுக்கு வாழ்வாதார சேவை மையத்தின் மூலமாக, குறைந்த விலையில் இயற்கை உரம், பஞ்சகாவியம், இயற்கை பூச்சி கொல்லி மருந்து உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும். இதில், ஒன்றியக்குழு துணைத்தலைவர் விஜயலட்சுமி கருணாகரன், ஒன்றிய செயலாளர் தம்பு, ஒன்றிய குழு உறுப்பினர் சிவபெருமான், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட விவசாயிகள் கிராமப்பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: