கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு தமிழகம் முழுவதும் முக கவசம் கட்டாயம்: பொது இடங்களில் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவிப்பு

சென்னை: நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2020 மார்ச் 7ம் தேதி தொடங்கியது. கொரோனா முதல் அலையில் 2020ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 6,997 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஒரே நாளில் கொரோனாவுக்கு 127 பேர் பலியாகினர்.

தொடர்ந்து இரண்டாம் அலையான 2021 மே மாதத்தில் ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேர் வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தினசரி பாதிப்பு 30 ஆயிரம் வரை இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. முழுநேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமை என்று பல்வேறு ஊரடங்குகளை அரசு அமல்படுத்தியது.

மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட், தியேட்டர்கள், சிறு மற்றும் பெரிய கடைகள் மூடப்பட்டன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு சென்று பணியாற்ற அனுமதிக்கப்பட்டது. அதே நேரத்தில் மேலும் ெகாரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2021 ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு இணை நோய் உள்ளவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு 2வது தவணை தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டது. மேலும் பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு அதிரடி நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைய தொடங்கியது. அதாவது, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்ற காரணங்களால் ஜெட் வேகத்தில் அதிகரித்த கொரோனா பாதிப்பு வெகுவாக குறையத் தொடங்கியது. தொடர்ந்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 50க்கும் குறைவானது. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை உருவானது.

கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 4ம் தேதி கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் விலக்கி கொள்வதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவித்தது. அதே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், கைகளை கழுவுதல் உள்ளிட்டவைகளை தொடர்ந்து கடைபிடிக்க ஊக்குவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அரசின் அறிவுரைகளை மதிக்காமல் மக்கள் செயல்பட்டதால் இந்த மாதம் மத்தியில் இருந்து கொரோனா பாதிப்பு ெமல்ல, ெமல்ல அதிகரிக்க தொடங்கியது. தற்போது தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 1472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்பட்சமாக சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 624 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். செங்கல்பட்டில் 241 பேர், கோவை 104 பேர், திருவள்ளூர் 85 பேர், காஞ்சிபுரம் 49 பேர், திருநெல்வேலி 46 பேர், கன்னியாகுமரி 39 பேர், திருச்சி 36 பேர், தூத்துக்குடி 30 பேர்,  ேசலம் 23 பேர் என்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ஆனால், உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதையடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கோவிட் தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.

மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது. பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் கோவிட் தொற்று அதிகரித்து வருகின்றது.

இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும். தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருப்பவர்கள், கோவிட் வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் நகர்ப்புறங்களில் தொற்று அதிகரித்து வருகின்றது.

* பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை மக்கள் கடைபிடிக்காததால் தொற்று அதிகரிக்கிறது.

* மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் சரியாக அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது, தடுப்பூசி செலுத்துவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.

Related Stories: