முட்டை விலை 550 காசாக உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 550 காசாக உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த இரு வாரமாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முட்டை விலையில் என்இசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜ் மாற்றம் செய்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் 15 காசுகள் உயர்த்தியுள்ளார். அதன்படி ஒரு முட்டையின் விலை 535 காசில் இருந்து 550 காசாக அதிகரித்துள்ளது.

கடந்த 40 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை விலை 550 காசாக உயர்வது இது 2வது முறையாகும். இதற்கு முன் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் முட்டை விலை 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது ஒரு முட்டையின் விலை 550 காசாக இருப்பதால் தமிழகம் முழுவதும் சில்லரை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். ஒரு முட்டையின் விலை கடைகளில் ரூ.6க்கு விற்கிறது.

முட்டை விலை உயர்வுக்கான காரணம் குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், கோழி தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வால், கடந்த 6 மாதமாக பண்ணைகளில் புதிதாக குஞ்சுகள் விடுவதை பண்ணையாளர்கள் குறைத்துக் கொண்டனர். இதனால் தினசரி முட்டை உற்பத்தி 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. நாட்டின் அனைத்து மண்டலங்களிலும் முட்டை உற்பத்தி குறைந்து வருவதால் விலை அதிகரித்துள்ளது என்றனர்.

Related Stories: