வாலாஜாபாத் ஒன்றியத்தில் 764 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், நேற்று 764 பயனாளிகளுக்கு ₹10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று வழங்கினார். இதில் கலெக்டர் ஆர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.  காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் பெறப்பட்ட மனுக்களில், தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நேற்று வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக வட்டாரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார். முன்னதாக, வாலாஜாபாத் ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் வருவாய் துறை சார்பில் 432 மனுக்கள், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 510 மனுக்கள், பிற துறைகளின் சார்பில் 253 மனுக்கள் என மொத்தம் 1,195 மனுக்கள் கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களாக பெறப்பட்டன.

இதில், 312 பயனாளிகளுக்கு ₹4.83 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 100 பயனாளிகளுக்கு ₹12 லட்சம் மதிப்பில் உதவித் தொகைகள் என பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்காக மொத்தம் 764 பயனாளிகளுக்கு ₹10.02 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட 764 பயனாளிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் ₹10.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதில் ஜி.செல்வம் எம்பி, எம்எல்ஏக்கள் க.சுந்தர், சிவிஎம்பி.எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பபை ஆ.மனோகரன், துணை தலைவர் சு.நித்யா, வாலாஜாபாத் ஒன்றிய குழுத் தலைவர் க.தேவேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, ஒன்றிய குழு துணைத் தலைவர் சேகர், பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லி, துணை தலைவர் சுரேஷ்குமார், திமுக பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: